வடக்கிலிருந்து முற்றாக ஒழித்துக்கட்டுவேன்! வடக்கின் ஆளுநர்
வட மாகாணத்திலிருந்து போதைப்பொருள் பாவனை முற்றாக ஒழிக்கப்படும் என புதிய ஆளுநர் சுரேன் ராகவன் வாக்குறுதி வழங்கியுள்ளார்.
வடக்கில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில், வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் பதவியேற்றதன் பின்னர் சர்வமத தலைவர்களை சந்தித்து வருகிறார்.
அவர், யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதி விமல தேரர் மற்றும் நயினாதீவு நாக விகாரையின் விகாராதிபதி நமதகல சத்மகீத்தி திஸ்ஸ தேரரையும் சந்தித்துள்ளார்.
இதன்போது, வடக்கு மாகாணத்தில் நிலவும் போதைப்பொருள் பாவனை தொடர்பில் விகாராதிபதிகள் ஆளுநரிடம் எடுத்துரைத்தனர்.
குறிப்பாக இளைஞர்களைத் தவறான வழிக்கு இட்டுச்செல்லும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டனர்.
விகாராதிபதிகளின் இக்கருத்துக்குப் பதிலுரைத்த அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நேரடிக் கண்காணிப்பில் போதைப்பொருள் ஒழிப்பு செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருவதுடன், ஜனாதிபதியின் இந்த செயற்திட்டத்துடன் இணைந்து வடக்கில் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.