பிரஜாவுரிமை என்பது எனது தனிப்பட்ட விடயம்!

பிரஜாவுரிமை என்பது எனது தனிப்பட்ட விடயம்!

ஒரு நாட்டின் பிரஜாவுரிமையை வைத்துக்கொள்வதும், நீக்கிக்கொள்வதும் தனது தனிப்பட்ட விடயம் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதனால் யாருக்கும் பிரச்சினை இல்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் டீ.ஏ.ராஜபக்ஷ நினைவு அருங்காட்சியகத்தை அமைக்க அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அது தொடர்பான விசாரணைக்கு இன்று (வியாழக்கிழமை) விசேட மேல் நீதிமன்றத்தில் கோட்டா முன்னிலையாகியிருந்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்கள், அவரிடம் அமெரிக்க பிரஜாவுரிமை தொடர்பாக கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்தபோதே கோட்டா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

”பிரஜாவுரிமை என்பது எனது தனிப்பட்ட விடயம். அதனை வைத்துக்கொள்ளவும் முடியும், நீக்கிக்கொள்ளவும் முடியும். அதனால் யாருக்கும் பிரச்சினையில்லை. ஒரு மனிதனை கட்டிவைக்க முடியாதுதானே?

ஜனநாயகத்தின் உயரிய நிலையில் இருப்பதாக அமெரிக்கா கூறுகிறது. அவ்வாறு கூறுபவர்கள் ஒரு மனிதனின் அடிப்படை உரிமையை கட்டிவைக்க மாட்டார்கள்” என்றார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டா களமிறக்கப்படலாம் என்ற கருத்துக்கள் அண்மைய காலமாக வெளிவந்தவண்ணமுள்ளன. சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவும் இதனைத் தெரிவித்திருந்தார். ஆனால், இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றால் அவர்களது நியமனங்கள் செல்லுபடியாகாது.

கோட்டாவும் அமெரிக்க பிரஜாவுரிமை பெற்றவர் என்ற ரீதியில், அவரது அமெரிக்க குடியுரிமையை ரத்துசெய்தால் மாத்திரமே தேர்தலில் போட்டியிடலாம் என ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டு வருகின்றது. அதன் பின்னணியிலேயே கோட்டா இவ்விடயத்தைக் கூறியுள்ளார்.

இதேவேளை, கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை, இரட்டை பிரஜாவுரிமை காரணமாக பறிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net