பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதை விரைவுபடுத்தவும்!

பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதை விரைவுபடுத்தவும்!

வேலையற்று பல வருடங்களாக இருக்கும் பட்டதாரிகளுக்கு இந்த அரசாங்கம் உள்வாரி வெளிவாரி என்ற பேதங்களைக் காட்டாமல் தொழில்வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் செயற்பாட்டை மிக வேகமாக முன்னெடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஶ்ரீநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் திங்கட்கிழமை காலை 21.01.2019 ஆம் திகதி நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

”எமது கிழக்கு மாகாணத்தில் தீர்க்கப்படாத பல்வேறு பிரச்சனைகள் இப்போதும் இருந்துகொண்டே இருக்கின்றன, அந்தவகையில் தற்போது முக்கியமானதொரு பிரச்சனையாக காணப்படுவது பட்டதாரிகளின் நியமனம் தொடர்பான பிரச்சனை.

கடந்தகாலத்தில் பட்டதாரிகள் தங்களுக்கு தொழில்வாய்ப்பு தரவேண்டும் என்ற அடிப்படையில் மட்டக்களப்பிலும் காரைதீவிலும் திருகோணமலையிலும் சாத்வீக அடிப்படையில் பல்வேறு விதமான கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்தியிருந்தார்கள்.

இதில் குறிப்பாக மட்டக்களப்பு காந்திப் பூங்கா முன்பாக தொடர்ச்சியாக பல மாதங்கள் இப் போராட்டத்தை நடாத்தினர்.

இதன் அடுப்படையில் பட்டதாரிகளை பயிலுனர்களாக நியமித்து அவர்களுக்கு இரண்டு வருடம் பயிற்சிகளை அளித்ததன் பின்னர் நிரந்தர நியமனம் வழங்குவதாக கூறப்பட்டது, தொடந்து பட்டதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திலும் ஏனைய சில மாவட்ட செயலகங்களிலும் நடாத்தப்பட்டது.

இதன்போது பட்டதாரிகளை உள்வாரிப் பட்டதாரிகள் வௌிவாரிப் பட்டதாரிகள் என்று பாரபட்சம் பார்க்காமலே அந்த நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டு அவர்களுக்கு புள்ளிகளும் வழங்கப்பட்டிருந்தன.

அந்தவகையில் உள்வாரி வௌிவாரி என்று பேதங்களில்லாமல் தமக்கு நியமனங்கள் கிடைக்கும் என்று இப் பட்டதாரிகள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். இவ்வாறிருக்கையில் உள்வாரிப் பட்டதாரிகளுக்கு மாத்திரம் நியமனங்கள் கொடுக்கப்பட்டிருந்தன அடுத்த கட்டத்தில் வௌிவாரிப் பட்டதாரிகளுக்கு நியமனங்கள் கொடுப்பதாகவும் உறுதி கூறப்பட்டிருந்தது.

ஆனால் இந்த முதல் கட்டத்தில் பட்டதாரி பயிலுனராக நியமனம் பெற்ற பட்டதாரிகள் தங்கள் பணித்தளத்தில் கடமைகளை செய்துவருகின்றனர்,

இரண்டாவது கட்டத்தில் பட்டதாரிகளை உள்வாங்கும்போது அதிலாவது வௌிவாரிப் பட்டதாரிகள் உள்வாங்கப்படுவார்கள் என்ற ஒரு கனதியான எதிர்பார்ப்புடன் வௌிவாரிப் பட்டதாரிகள் இருந்து வருகின்றனர்.

ஆனால் அரசாங்கத்தால் அந்த வௌிவாரிப் பட்டதாரிகள் பற்றிய சிந்தனைகள் இன்னும் கவனத்தில் கொண்டுவரப்படவில்லை என்பது மிக வேதனைக்குரியது

ஒருவகையில் பார்க்கின்றபோது இந்த உள்வாரி பட்டதாரிகளாக இருக்கலாம் வௌிவாரிப் பட்டதாரிகளாக இருக்கலாம் இரு சாராரும் இலங்கை அரசாங்கத்தினால் அங்கிகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் அந்த பல்கலைக் கழகங்களின் பாடத்திட்டப்படியே கற்று சித்தியடைந்து வந்துள்ளபோது வௌிவாரிப் பட்டதாரிகளை புறக்கணித்து செயற்படுவதென்பது அவர்களது அடிப்படை உரிமையை அதாவது தொழில்வாய்ப்பு பெறும் உரிமையை மீறுகின்ற செயலாக அமையலாம் என சிந்திக்கும் நிலையில் தற்போது அவர்கள் உள்ளனர்.

உள்வாரிப் பட்டதாரிகள் ஒரு தொகுதியினருக்கு தொழில் வாய்ப்புகள் வழங்கிய இந்த நிலையில் வௌிவாரிப் பட்டதாரிகள் எவருக்கும் தொழில்வாய்ப்பு வழங்கப்படாமல் இருப்பது என்பது அவர்களுக்கு ஒரு மன உழைச்சலை ஏற்படுத்துகின்ற செயற்பாடாக இருப்பது என்பது மட்டுமல்லாமல், இவர்கள் தமது வயது எல்லையினைக் கூட தாண்டிக்கொண்டிருக்கின்றார்கள்.

35 வயதுக்குட்பட்டவர்களுக்குத்தான், வேலை என சொல்லுகின்றபோது 2012 ஆம் ஆண்டிலிருந்து ஏறக்குறைய ஏழு வருடங்கள் பட்டங்களைப் பெற்றும் தொழில் இல்லாமல் இருப்பவர்களுக்கு இந்த வயது என்பது தடையாக அமைந்து அவர்கள் அந்த தொழில்வாய்ப்பை இழக்கக்கூடிய நிலமையில் இருக்கின்றார்கள்.

எனவே பொறுப்புள்ள நல்லாட்சி என்று கூறுகின்ற கடந்தகால அரசாங்கம், தற்கால அரசாங்கம் உள்வாரி வௌிவாரி என்ற பேதங்களைக் காட்டாமல் பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பை கொடுக்கக்கூடிய தங்களுடைய செயற்பாட்டை முன்னெடுக்கவேண்டும் என்பதுடன் இவர்களது வயதுக் கட்டுப்பாடுகள் 35 ஆக வகுக்கின்றபோது பலரருக்கு தொழில் கிடைக்காத சந்தர்ப்பங்கள் ஏற்பட வாய்புள்ளது ஆகையால் வயதுக்கட்டுப்பாட்டை 45ஆக மாற்றும்போது அது ஒரு சிறந்த செயற்பாடாக அமையும்”. என தெரிவித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net