தமிழர்களுக்கு நன்மைபயக்காத அரசியல் யாப்பிற்கு ஆதரவில்லை!
தமிழர்கள் கௌரவமாக வாழக்கூடிய வகையில் புதிய அரசியலமைப்பில் யாப்புக்கள் உள்ளடக்கப்படாவிட்டால்.
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க மாட்டோமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தனிப்பட்ட தேவைகளை கருத்திற்கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
குறுகிய காலத்தில் தீர்க்கக்கூடிய பிரச்சினைகள் தொடர்பாக எழுத்துமூலம் அரசாங்கத்திற்கு ஏற்கனவே தெரிவித்துள்ளதாக சார்ள்ஸ் நிர்மலநாதன் இதன்போது குறிப்பிட்டார்.
இந்நிலையில், தற்போது முன்வைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவின் அறிக்கை சரியான முறையில் இறுதிப்படுத்தப்பட வேண்டுமென சுட்டிக்காட்டினார்.
தமிழ் மக்கள் தங்களை தாங்களே ஆளும் வகையில் அரசியல் யாப்பில் மாற்றம் கொண்டுவந்தால் மாத்திரமே அரசியல் யாப்பிற்கு ஆதரவாக வாக்களிப்போம் என சர்ள்ஸ் நிர்மலநாதன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.