அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு மாற்று யார்?
அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு மாற்று யார்? என எதிர்க்கட்சிகளிடம் பாரதீய ஜனதா கேள்வி எழுப்பியுள்ளது.
அத்துடன் எதிர்க்கட்சிகளால் மாற்று என ஒரு தலைவரை வழங்க முடியாது என அக்கட்சியின் முத்த தலைவரும் மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர் குறிப்பிட்டுள்ளார்.
மராட்டிய மாநிலம், புனேயில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
“கொல்கத்தாவில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தன. இக்கட்சிகள் அனைத்தும் பிரதமர் பதவியில் இருந்து மோடியை வெளியேற்ற வேண்டும் என்று விரும்புகின்றன. அப்படியென்றால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு மாற்று யார் என்று சொல்லுங்கள்?
அவர்களால் மாற்று என ஒரு தலைவரை வழங்க முடியாது. எனவே மோடி இல்லையென்றால் நாட்டில் அராஜகமே இருக்கும்.
கடந்த காலத்தில் ஐ.கே.குஜ்ரால், சந்திரசேகர், தேவேகவுடா தலைமையிலான கூட்டணி அரசுகளை பார்த்திருக்கிறோம். அந்த பலவீனமான அரசுகளால் மக்கள் பாதிப்புக்கு ஆளானார்கள்.
மற்றொரு பக்கம் பலம் வாய்ந்ததும், கொள்கைகளின் அடிப்படையிலானதுமான மோடி தலைமையிலான அரசினால் பல நன்மைகளை மக்கள் பார்த்துவிட்டார்கள்.
எனவே வரக்கூடிய தேர்தலில், பலம் வாய்ந்த ஒரு அரசு வேண்டுமா? அல்லது பலவீனமான அரசு வேண்டுமா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.
கொல்கத்தா பொதுக்கூட்டம், எதிர்க்கட்சிகளின் பதற்றத்தைக் காட்டியது. அவர்களால் தேர்தல் அறிக்கையையோ அல்லது குறைந்தபட்ச செயற்திட்டத்தையோ தயாரிக்க ஒரு குழுவைக்கூட அமைக்க முடியவில்லை.
காங்கிரஸூம், ஏனைய எதிர்க்கட்சிகளும் ஒரு பலவீனமான அரசையே விரும்புகின்றனர்.
அப்போதுதான் அவர்களால் ஊழல் செய்ய முடியும். ஆனால் மக்களோ நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்கும், ஊழலில் தொடர்புடைய யாரையும் விட்டுவிடாத மோடி அரசைப் போன்ற பலம் வாய்ந்த அரசையே விரும்புகிறார்கள்” என்று அவர் தெரிவித்தார்.