ஆண்களாக மாறி சலூன் கடை நடத்தும் சகோதரிகள்!

ஆண்களாக மாறி சலூன் கடை நடத்தும் சகோதரிகள்!

உத்தர பிரதேசத்தில் ஆண்களாக மாறி சலூன் கடை நடத்தும் இரு சகோதரிகளுக்கு அரச கௌரவம் கிடைத்துள்ளது.

ஆம், இவர்களின் தன்னம்பிக்கை, விடாமுயற்சியைப் பாராட்டியே உத்தரப் பிரதேச அரசு கௌரவித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த துருவ் நாராயணனுக்கு ஜோதி குமாரி (18), நேகா (16) என இரு மகள்கள் இருக்கின்றனர்.

சலூன் கடை நடத்திவந்த நாராயணனுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால் 2014 இல் இருந்து அவர் படுத்த படுக்கையானார்.

சலூனைத் தவிர இவர்களுக்கு வருமானம் ஈட்டுவதற்கான வழியில்லாததால், மகள்கள் இருவரும் தந்தையின் சலூனை நடத்த முடிவுசெய்தனர். ஆனால் அதற்கும் பிரச்சினை வந்தது.

இளம் பெண்களிடம் தாடியை எடுக்கவும், மீசையை எடுக்கவும், முடி வெட்டிக்கொள்ளவும் உள்ளூர் வாடிக்கையாளர்கள் தயங்கினர். சிலர் தவறாக நடக்க முயற்சித்தனர்.

இதனால் தங்களின் உருவத்தை மாற்ற சகோதரிகள் இருவரும் முடிவுசெய்தனர். தலைமுடியை வெட்டி, கையில் ஆண்களைப் போல காப்பு போட்டுக்கொண்டனர். தீபக், ராஜு என்று ஆண் பெயரை வைத்துக்கொண்டனர்.

என்றாலும், அவர்களின் கிராமத்தில் இருப்பவர்களுக்கு இவர்களைப் பற்றித் தெரிந்தே இருந்தது. ஆனால் சில ஆண்டுகளில் பக்கத்து ஊர்களில் இருந்து வந்த வாடிக்கையாளர்கள் இதனை அறியவில்லை.

இதன்மூலம் கிடைக்கும் வருமானம், தந்தையின் மருத்துவத்துக்கும் குடும்பச் செலவுக்கும் போதுமானதாக இருந்தது.

இந்த நிலையிலும் படிப்பை கைவிடாத இருவரும், காலையில் பள்ளிக்குச் சென்றுவிட்டு, மதியத்துக்கு மேல் கடையைத் திறப்பர்.

இவ்வாறு படித்து, ஜோதி இப்போது பட்டதாரி ஆகிவிட்டார். நேகா இன்னும் படித்துக்கொண்டிருக்கிறார்.

இதுகுறித்துப் கூறிய நேகா,

”ஆரம்பத்தில் கிராமத்திலுள்ள சிலரே எங்களைக் கிண்டலடிப்பர். ஆனால் அவர்களைக் கண்டுகொள்ளாமல் வேலையில் கவனம் செலுத்தினோம். ஏனென்றால் அப்போது எங்களுக்கு வேறு வழியில்லை.

ஆனால் இப்போது எங்களுக்கு தன்னம்பிக்கை இருக்கிறது. யாரைக் கண்டும் பயப்படுவதில்லை.

நாட்கள் செல்லச் செல்ல எங்களுடைய நிஜ அடையாளத்தை வாடிக்கையாளர்களிடம் வெளிப்படுத்தினோம். பெரும்பாலானோர் எங்களைப் புரிந்துகொண்டனர்.

அக்கா (ஜோதி) மீண்டும் தன்னுடைய முடியை வளர்க்க ஆரம்பித்துவிட்டாள். ஆனால் என்னைப் பார்த்தால் இப்போது கூட யாராலும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாது” என்று கூறினார்.

இவர்களின் கதை ஒரு செய்தித்தாளில் வரவே, அரச அதிகாரிகள் அழைத்து அவர்களை கௌரவித்துள்ளனர்.

Copyright © 6030 Mukadu · All rights reserved · designed by Speed IT net