ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்க வலியுறுத்தி ஹட்டனில் போராட்டம்!
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்க வலியுறுத்தி இன்று நாடு தழுவிய ரீதியில் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஹட்டன் நகரத்திலும், ஆயிரம் ரூபாய் இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் தினமும் உழைக்கும் உழைப்பிற்கு அடிப்படை ஊதியமாக ஆயிரம் ரூபாயை வழங்கு என முதலாளிமார் சம்மேளனத்துக்கு அழுத்தம் கொடுக்கும் முகமாகவே குறித்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
ஹட்டன் பேருந்து தரிப்பு நிலையத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும், கறுப்பு கொடிகளையும் ஏந்திய வண்ணம் கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டம் சுமார் ஒரு மணித்தியாலயம் வரை முன்னெடுக்கப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ஹட்டன் – பொகவந்தலாவ
இதேவேளை பொகவந்தலாவ கெம்பியன் தோட்டத்திலும் ஆயிரம் ரூபாய் இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெழும்பாக திகழும் பெருந்தோட்டதுறை சார்ந்த தொழிலாளர்களுக்கு ஏன் ஆயிரம் ரூபாவை வழங்க முடியாது என பொகவந்தலாவ பகுதியை சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து பொகவந்தலாவ, கெம்பியன் தோட்டத்திலிருந்து எதிர்ப்பு வாசகங்களை எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு பொகவந்தலாவ நகரம் வரை ஊர்வலமாக சென்றுள்ளனர்.
தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி சுகபோக வாழ்க்கையை நடத்தும் கம்பனிகாரர்கள் இன்றைய வாழ்வாதாரத்தினை நினைவில் வைத்து கொண்டு அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை இறுதி பேச்சுவார்த்தையாக முன்னிருத்தி ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை வழங்க வேண்டும் என அழுத்தமான கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர்.