மஹிந்த குழுவினர் அரசியலமைப்பிற்கு எதிராக கருத்துக்களை வெளியிடுகின்றனர்!
தென்னிலங்கையில் மஹிந்த ராஜபக்ஷ குழுவினர் அரசியலமைப்பிற்கு எதிராக போலியான கருத்துக்களை பரப்பி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாங்காடு அருள்மிகு சுயம்புலிங்க மகா விஸ்ணு ஆலயத்திற்கான மண்டபம் மற்றும் வரவேற்பு அலங்கார கோபுரத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (புதன்கிழமை) நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“புதிய அரசியல் யாப்பிற்கான நிபுணர்களின் அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த இனப்பிரச்சினையை தீக்கும் விடயத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்குவதில்லையென பெரும்பான்மை கட்சிகளும் அரச கட்சிகளும் குற்றஞ்சாட்டுகளை தெரிவிக்கின்றனர்.
இனப்பிரச்சினையை தீர்க்கும் விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆர்வம் காட்டவில்லையென்ற குற்றச்சாட்டினையும் சர்வதேசத்திடம் சுமத்தியிருந்தனர்.
பிரிக்கப்படாத நாட்டிற்குள் எங்களுடைய அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்கின்ற அதிகாரப் பகிர்வு முறை, காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களையும் நாங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு நிபுணர் குழுவினது அறிக்கையே நாடாளுமன்றத்தில் விவாதத்தில் உள்ளது.
இதனைக் குழப்பியடிக்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பேரினவாத சக்திகள் விஷமத்தனமான முறையில் செயற்பட்டுவருகின்றன” என சிறிநேசன் மேலும் குறிப்பிட்டார்.