லசா காய்ச்சல் காரணமாக இதுவரையில் 16 பேர் பலி!
நைஜீரியாவில் மிக வேகமாக பரவி வரும் புதிய லசா காய்ச்சல் காரணமாக இதுவரையில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உலகின் மிக மோசமான நோய்களில் ஒன்றான லசா காய்ச்சல் கடந்த ஆண்டின் ஆரம்பத்திலிருந்து திடீரென வேகமாக பரவி, 23 நாடுகளை தாக்கியது. இதன்காரணமாக 171 உயிரிழந்திருந்தனர்.
இந்தநிலையில் குறித்த நோய் தற்போது நைஜீரியாவில் மீண்டும் பரவி வருவதாக அந்நாட்டு சுகாதார திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்காரணமாக நைஜீரியாவில் லசா காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட 16 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது 26.7 சதவிகித இறப்பு விகிதம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய மையக் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் 172 நோயாளிகள் லசா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. பரிசோதனையின் முடிவில் 60 பேர் லசா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் நைஜீரியாவின் 36 மாநிலங்களிலுள்ள ஏழு இடங்களிலும், அபுஜாவின் தலைநகரத்திலும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருதற்குரிய நடவடிக்கைகளை நைஜீரிய சுகாதார அதிகாரிகள், உலக சுகாதார அமைப்பு மற்றும் நோய் கட்டுப்பாட்டுக்கான அமெரிக்க மையங்களுடன் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.
லசா வைரசானது மார்பர்க் மற்றும் எபோலா எனும் இரண்டு கொடிய வைரஸ்களின் குடும்பத்தைச் சார்ந்தது. இதனால் கடுமையான காய்ச்சல், வாந்தி மற்றும் இரத்த சோகை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
லசா எனும் பெயர் வடக்கு நைஜீரியாவின் லசா நகரத்திலிருந்து வந்ததாகும். இந்நோய் 1969 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.