தமிழர்களை தொடர்ந்தும் கையேந்தச் செய்வதுதான் அரசின் விருப்பமா?
தமிழர்களை தொடர்ந்தும் கையேந்தும் நிலையில் வைத்திருப்பது தான் இந்த அரசாங்கத்தின் விருப்பமா என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் (புதன்கிழமை) இடம்பெற்ற கடன் இணக்க திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,
”யுத்தம் நிறைவடைந்து பத்தாண்டுகள் பூர்த்தியாகப் போகின்றது. எனினும், பெரும்போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொழில் வழங்கக்கூடிய தொழிற்சாலையொன்றை அமைப்பதற்கான வல்லமை அரசாங்கத்திற்கு இல்லை.
ஏற்கனவே இருந்த தொழிற்சாலைகளை புதுப்பித்து இயக்கக்கூட அரசாங்கங்களுக்கு ஏன் முடியவில்லை.
வடக்கு கிழக்குத் தொடர்பான அபிவிருத்திகள் குறித்து அரசாங்கம் சிறிதளவேனும் அக்கறை கொள்வதாகத் தெரியவில்லை.
அண்மையில் கிளிநொச்சி உள்ளிட்ட வடக்குப் பிரதேசங்களில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புக்கள் தொடர்பில் இதுவரை அம்மக்களுக்கான நிரந்தரத் தீர்வுகள் முழுமையாக முன்வைக்கப்படவில்லை.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் கடும் யுத்தத்தால் தமது வாழ்வினைத் தொலைத்தவர்கள். அவர்களது வாழ்வாதாரத்தினை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டியது இந்த அரசாங்கத்தின் கடமையாகும்.
வடக்கு – கிழக்கு தொடர்பாக இந்த அரசாங்கத்தின் எண்ணம் தான் என்ன என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. வடக்கு, கிழக்கின் யுத்தப் பாதிப்புகளை மறைக்கவே அரசாங்கம் முயற்சித்து வருகிறது” எனத் தெரிவித்தார்.