பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை கோரி பேரணி

91_2890827f
ராஜிவ் கொலை வழக்கை முடிவுக்குக் கொண்டு வர முதல்வரால் முடியும் என்று அற்புதம்மாள் கூறியுள்ளார்.
02_2890962a
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி சென்னையில் பேரணி நடைபெற்று வருகிறது.

அற்புதம்மாள் தலைமையில் சென்னை – எழும்பூரில் தொடங்கிய இந்தப் பேரணி, தலைமைச் செயலகம் அமைந்துள்ள கோட்டையில் முடிவடைகிறது.

நடிகர் சங்கத் தலைவர் நாசர், இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன், இயக்குநர்கள் ஜனநாதன், கௌதம், ரமேஷ் கண்ணா, நடிகர் சத்யராஜ், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் மற்றும் தன்னார்வலர்கள் என ஆயிரக்கணக்கானோர் இப்பேரணியில் கலந்துகொண்டனர்.

”பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏற்கெனவே முடிவு செய்துள்ளார். மத்திய அரசு 7 பேரையும் விடுதலை செய்ய கருணையுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சீமான் கூறியுள்ளார்.

”7 பேரை விடுவிக்க தமிழக அரசு முன் வந்தாலும் மத்திய அரசு தடை செய்யக்கூடாது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக 7 பேரை சிறையில் வைத்திருப்பது மனிதநேயத்துக்கு அப்பாற்பட்டது” என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

பேரணியில் அற்புதம்மாள் பேசியதாவது:

‘‘7 பேரை விடுவிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா 2 முறை நடவடிக்கை எடுத்தார். அது, தடைபட்டு நிற்கிறது. இந்த முறை விரைந்து 7 பேர் விடுதலைக்கு முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வரிடம் வலியுறுத்த இந்த பேரணி நடத்துகிறோம்.

வேலூரில் தொடங்கி சென்னை கோட்டையில் பேரணி முடிவதாகத்தான் திட்டமிட்டோம். 3 மாவட்டங்கள் சம்பந்தப்பட்டது என்பதால் வேலூரில் பேரணி தொடங்க முடியாது. வேறு ஏதேனும் மாற்றத்துடன் திட்டமிடுங்கள் என்று காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்தனர். அதனடிப்படையில் சென்னை எழும்பூரில் இருந்து கோட்டை நோக்கி பேரணி நடைபெறுகிறது.

பேரறிவாளன் உட்பட 7 பேரும் கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பேரறிவாளன் பிரிவை வார்த்தைகளால் விளக்க முடியாது. தற்போது எல்லோருக்கும் 7 பேர் விடுதலையாக வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. நிறைய உண்மைகள் வெளிப்பட்டுள்ளன. அதில் என் மகன் பேரறிவாளன் நிரபராதி. அவனுக்கும் ராஜிவ் கொலை வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது உலகம் முழுக்கப் பரவி உள்ளது. இந்த வழக்கே சலசலப்புக்கு உண்டாகி இருக்கிறது.

கடந்த 25 ஆண்டுகளில் பேரறிவாளன் ஒரு முறை கூட பரோலில் வெளிவரவில்லை. இளமைக்காலம் முழுவதும் பேரறிவாளனுக்கு சிறையிலேயே போய் விட்டது. இப்போது நோயாளியாக வெளியே வரப் போகிறான்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் விடுதலையாகி வெளியே வர வேண்டும். அவர்களுக்கென்று வாழ்க்கை இருக்கிறது.

உலகம் முழுக்க பார்த்தால் 25 ஆண்டுகளில் ஒரு முறை கூட பரோலில் வெளிவராத சிறைவாசிகளே இல்லை. ஆனால், இந்த 7 பேருக்கும் எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை. சாதாரண சிறைவாசிகளுக்கு கிடைக்கும் சலுகைகள் கூட 7 பேருக்கும் கிடைக்கவில்லை. 7 பேருக்கும் கிடைத்திருக்கும் தண்டனை மிகவும் கொடுமையானது.

இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வர முதல்வரால் மட்டுமே முடியும். எங்கள் கோரிக்கையை ஜெயலலிதா தான் நிறைவேற்ற வேண்டும். இது தொடர்பாக முதல்வரையும் சந்திக்க உள்ளோம்” என்றார் அற்புதம்மாள்.

Copyright © 8480 Mukadu · All rights reserved · designed by Speed IT net