வடக்கு மாகாணத்தில் கண்ணிவெடிகளை அகற்ற ஜப்பான் நிதியுதவி
வடக்கு மாகாணத்தில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு ஜப்பான் அரசாங்கம் 624,382 அமெரிக்க டொலர்கள் (அண்ணளவாக 100 மில்லியன் இலங்கை ரூபாய்) மானிய நிதியுதவி வழங்கியுள்ளது.
இதற்கான உடன்படிக்கை இன்று (வியாழக்கிழமை) கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதுவரின் வாசஸ்தலத்தில் கைச்சாத்திடப்பட்டது
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அஹிரா சுகியாமா, சமூக ஒற்றுமைக்கான டெல்வன் உதவித்திட்ட நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் ஆனந்த சந்திரசிறி ஆகியோருக்கிடையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
மனிதாபிமான கண்ணிவெடி அகற்றலுக்கு உதவி வழங்கும் பிரதான உதவி வழங்குனராக ஜப்பான் கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் செயற்பட்டு வருவதுடன், அடித்தள மனித பாதுகாப்பு திட்டத்திற்காக இதுவரை 34.5 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது.
இந்த உதவியானது, இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த உதவியுள்ளதுடன், இடம்பெயர்ந்த மக்களின் விவசாயம் மற்றும் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும், 2020ஆம் ஆண்டில் கண்ணிவெடியற்ற இலங்கையைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற இலக்கைக்கொண்டு அமைந்துள்ளது.
Dash நிறுவனம் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கண்ணிவெடி அகற்றலை மேற்கொண்டு வருகின்றது.
இந்த மானிய உதவித்திட்டம் குறித்து கருத்து வெளியிட்ட Dash நிறுவன திட்டமிடல் பணிப்பாளர் ஆனந்த சந்திரசிறி, இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுவரும் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைக்கு ஜப்பான் பிரதான ஆதரவாளராக ஆரம்பத்திலிருந்து செயற்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
அத்தோடு, Dash நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் இந்த திட்டத்திற்கு வழங்கப்பட்ட மானிய நிதியானது உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு மாத்திரமல்லாமல் மீள்குடியேறிய மக்களின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.