புலம்பெயர் சமூகத்திடம் குற்றங்களில் ஈடுபட்ட படையினரின் விபரங்கள்?

புலம்பெயர் சமூகத்திடம் குற்றங்களில் ஈடுபட்ட படையினரின் விபரங்கள்? உலகத் தமிழ் பேரவையின் கோரிக்கை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டுமென உலகத் தமிழ் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ அண்மையில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில், உலக தமிழ் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெற்கு ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

குற்றச் செயல்களில் ஈடுபட்ட படையினர் பற்றிய விபரங்களை புலம்பெயர் சமூகம் வழங்க வேண்டுமென ஹேமசிறி பெர்னாண்டோ அண்மையில் கோரியிருந்தார்.

பாதுகாப்புச் செயலாளரின் கருத்து வரவேற்கப்பட வேண்டியது எனவும், ஜெனீவா தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் வரையில் இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது எனவும் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

சிவில் சேவையில் கடமையாற்றிய வரும் சிரேஸ்ட அதிகாரியொருவர் படைவீரர்களின் குற்றச் செயல்கள் தொடர்பிலான தகவல்களை வழங்குமாறு கோரியுள்ளமை வரவேற்கப்பட வேண்டியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், நாட்டின் ஜனாதிபதி உள்ளிட்ட ஏனைய உயர் அரசியல் தலைவர்கள் இந்த கருத்து தொடர்பில் மாறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டுள்ளமை தெளிவாக புலனாகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2015 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பிலான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவற்றை அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் உள்ளிட்ட பாரிய குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையிலான பொறிமுறைமையை உருவாக்கும் நோக்கில் இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.

போர்க் குற்றச் செயல்கள், மனிதாபிமானத்திற்கு எதிரான செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் உள்நாட்டு சட்டங்களை திருத்தி அமைத்து எவ்வாறு தீர்வுப் பொறிமுறைமை ஒன்றை உருவாக்குகின்றது என்பதனை பொறுத்தே படைத்தரப்பினர் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை குறித்த சாட்சியங்களை நாம் பகிர்ந்து கொள்வது தீர்மானிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Copyright © 9295 Mukadu · All rights reserved · designed by Speed IT net