படைமுகாம் வாயிலிலிருந்து 75 மீற்றர் தொலைவில் மக்கள் போராட்டத்தில்!

படைமுகாம் வாயிலிலிருந்து 75 மீற்றர் தொலைவில் மக்கள் போராட்டத்தில்!

நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய படைமுகாம் வாயிலிலிருந்து 75 மீற்றர் தொலைவில் தமது போராட்டத்தை தொடர்ந்தும் முன்னடுத்திருப்பதாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்புலவு மக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கும்வரை தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்கள், நேற்றிலிருந்து படைமுகாம் வாயிலில் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை படைமுகாம் வாயிலிலிருந்து 75 மீற்றர் தொலைவில் சென்று போராட்டம் நடத்துமாறும், குறித்த பகுதியில் போக்குவரத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு செயற்படுமாறு நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி படைமுகாம் வாயிலிலிருந்து 75 மீற்றர் தொலைவில் சென்று போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேப்பாப்புலவில் உள்ள தங்களது காணிகளை விடுவித்துத் தருமாறு வலியுறுத்தி கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கேப்பாப்புலவு பிரதேசத்தில் வசித்த 84 குடும்பங்களினால் 697 நாட்களாக, தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net