ஆனையிறவு – பழைய ஏ-9 வீதி புனரமைக்கப்பட்டுள்ளதால் 4 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு!
ஆனையிறவு – பழைய ஏ-9 வீதி மீண்டும் புனரமைக்கப்பட்டுள்ளதால் 4 ஆயிரம் குடும்பங்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான தீர்வினைப் பெற்றுத்தரக் கோரி பாதிக்கப்பட்ட மக்கள் இன்று (திங்கட்கிழமை) வடக்கு மாகாண ஆளுனர் செயலகத்தில் மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக குறித்த மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஆனையிறவு, பூநகரி, கிளாலி, கச்சாய், கரைச்சி, கண்டாவளை உள்ளிட்ட 41 கிராமங்களைச் சேர்ந்த 4 ஆயிரம் குடும்பங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனையிறவு பாலத்தை ஊடறுக்கும் ஆற்றுத்தொடுவாய் யாழ்நகரைச் சுற்றி பண்ணைப்பாலம், அரியாலை, சங்குப்பிட்டிப்பாலம் கிளாலி ஆனையிறவு, சுண்டிக்குளம், பூனையம்தொடுவாய் வழியாக சமுத்திரத்தை சென்றடைந்து மீள்சுழற்சியில் சுற்றிவரும். இதனால் மக்களுடைய வாழ்வாதாரமும் நிறைவாக இருந்தது.
குடிநீர் பிரச்சினைகளும் ஏற்படவில்லை அத்தோடு கடல்பகுதி அளவுக்கதிகமாக தரவையாக மாறவும் இல்லை.
தற்போது வட.மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வரட்சி மற்றும் வெள்ளம் காரணமாக மீண்டும் இப்பாலம் தொடர்பான பிரச்சினை எழுந்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி, கரைச்சி கண்டாவளை மற்றும் பூநகரி ஆகிய பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிட்டத்தட்ட 41 கிராமங்களைச் சேர்ந்த 3500 தொடக்கம் 4000 விவசாயிகள் மற்றும் மீனவர்கள் தமது வாழ்வாதார ரீதியில் பெரும் பாதிப்புகளையும் பிரச்சினைகளையும் எதிர்நோக்கியுள்ளனர்.
எனவே இதற்கான தீர்வுகளை வட.மாகாண ஆளுநர் முன்வைக்க வேண்டுமென நாம் வேண்டுகோளினை முன்வைக்கின்றோம்” எனக் குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.