கூட்டமைப்பினுடைய அடுத்த கட்டத் தெரிவு என்ன?
“இந்த ஆட்சிக்காலத்துக்குள் புதிய அரசியல் சாசனம் நிறைவேறாவிட்டால், அல்லது எங்களுடைய கோரிக்கைகள் உள்ளடக்கப்படாமல் அரசியல் சாசனம் நீர்த்துப்போகுமேயானால் சர்வதேசத்தை நாடும் நிலைமையே உருவாகும்.”
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் சாசனம் இந்த ஆட்சிக்காலத்துக்குள் நிறைவேறாவிட்டால் கூட்டமைப்பினுடைய அடுத்த கட்டத் தெரிவு என்ன? என்று அந்த ஊடகம் கேள்வியெழுப்பியிருந்தது.
இதற்கு பதலளித்து பேசிய அவர்,
“எங்களுடைய மக்களுடைய எதிர்ப்புகளைத் தாண்டியும் இந்த அரசாங்கத்துக்கு நாங்கள் பல வழிகளில் ஆதரவு வழங்கி வந்திருக்கின்றோம்.
அரசியல் தீர்வை எட்டவேண்டும் என்பதற்காக எந்தச் சந்தர்ப்பத்திலும் பொறுமையுடனும் நிதானத்துடனும் எங்களுடைய செயற்பாடுகளை முன்னெடுத்து அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வந்திருக்கின்றோம்.
அந்த அடிப்படையில் நாங்கள் ஏமாற்றப்படுகின்ற நிலைமை உருவாகினாலோ அல்லது எங்களுடைய முயற்சிகள் தோல்வியடைகின்ற நிலைமை உருவானாலோ சர்வதேச சமூகத்திடம் அவர்கள் தங்களுடைய கடமையைச் செய்ய வேண்டும் என்ற அழுத்தங்களைக் கொடுப்போம்.
சர்வதேசத்திடம் எந்த முறையிலெல்லாம் அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியுமோ அந்த வகையில் அழுத்தங்களைப் பிரயோகித்து நியாயம் கேட்போம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.