அரசாங்கம் வடக்கில் மீண்டும் புலிகளை உருவாக்குகின்றது!
வடக்கில் மீண்டும் புலிகளை ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் உருவாக்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
பொதுஜன பெரமுன முன்னணியின் தலைமையகத்தில் (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வடக்கில் மீண்டும் விடுதலைப் புலிகள் அமைப்பு தோன்றுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகக் காணப்படுகின்றது.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் இயங்காதிருந்த குறித்த அமைப்பானது கடந்த நான்கு ஆண்டுகால ஆட்சியில் மீண்டும் தலைதூக்கியுள்ளது.
இந்த அரசாங்கம் நாட்டினது பாதுகாப்புக் குறித்து எந்த அக்கறையுமின்றிச் செயற்படுவதையே நாம் காணக்கூடியதாக உள்ளது. நாம் தொடர்ந்தும் இந்த அரசாங்கத்தினது செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது.
நாட்டில் மீண்டும் விடுதலைப் புலிகள் அமைப்பு தோன்றுமாயின் பல பாரதூரமான அழிவிற்குரிய விடயங்கள் நாட்டில் இடம்பெறுவதற்கான நிலமைகள் தோன்றும்” என ரோஹித அபேகுணவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.