நீதியைக் கோரும் தமிழர் குரல் ஜெனீவா அமர்வில் ஒருமித்து ஒலிக்க வேண்டும்!

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா மனித உரிமைப் பேரவை அமர்வில், தமிழ் தரப்பினர் தமக்கான நீதியை ஒருமித்த குரலில் ஒரே கோரிக்கையாக முன்வைக்க வேண்டும் என, ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கான தீர்வு தொடர்பில் தமிழ் தரப்பு வெவ்வேறான கோரிக்கைகளை முன்வைக்கக் கூடாதென்றும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஏனைய தமிழ் தரப்பினருடனும், புலம்பெயர் அமைப்புக்களுடனும் கலந்துரையாடி செயற்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர்,
“காணாமலாக்கப்பட்டோர், யுத்தக் குற்றங்கள் போன்ற விடயங்கள் தொடர்பாக சர்வதேச நீதிபதிகளைக்கொண்ட விசாரணை ஆணையத்தினூடாக விசாரிக்கப்பட வேண்டுமென ஐ.நா. பேரவை தெரிவித்திருந்தது.
அத்தோடு, அதற்காக 4 வருட கால அவகாசமும் வழங்கப்பட்டது. எனினும் இலங்கை அரசாங்கம் அதை முற்றுமுழுதாக மறுதலித்து வருகின்றது. எந்தவிதமான விசாரணை ஆணையங்களும் இதுவரையில் நியமிக்கப்படவில்லை.
காணாமலாக்கப்பட்ட அலுவலகம் மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ளது. எனினும் குறித்த அலுவலக்தை காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களும் இதுவரையில் ஏற்றுக்கொள்ளவில்லை” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.