நாங்கள் ஜனாதிபதியுடன் இல்லை!
தனது ஆட்சிக்காலத்தில் இறுதி இரண்டு வருடங்கள் தான் கூறும் எதனையும் அன்றைய பிரதமர், அமைச்சர்கள், சில அதிகாரிகள் கவனத்தில் எடுக்கவில்லை என்பதால், 18ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தை கொண்டு வர நேரிட்டதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தமிழ் செய்தியாளர்களுடன் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் மகிந்த ராஜபக்ச இதனை கூறியுள்ளார்.
இதன் போது செய்தியாளர்கள், ஊடகவியலாளர்கள் கேள்விகளை எழுப்பினர்.
கேள்வி – 18ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் ஏன் அவசரமாக கொண்டு வரப்பட்டது?.
பதில் – அவசரமாக தயாரித்தாலும் அதனை சரியாக ஜீ.எல்.பீரிஸ் செய்தார். நான் மூன்றாவது முறையாக ஜனாதிபதியாக வர வேண்டும் என்ற நோக்கத்தில் 18வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்படவில்லை. இறுதி இரண்டு ஆண்டுகள் எவரும் சரியாக வேலை செய்யவில்லை. ஜனாதிபதி கூறுவதை பிரதமர், அமைச்சர்கள் மட்டுமல்ல, சில அதிகாரிகளும் கேட்கவில்லை.
கேள்வி – நீங்கள் அப்படி கூறினாலும் ஜனாதிபதி அப்படி கூறவில்லையே?.
பதில் – ஆமாம். எனக்கு எதிரிலும் கூறினார். நாலாபுறமும் என்னை தாக்கினீர்கள் தானே என்று நான் ஜனாதிபதிக்கு அருகில் சென்று கூறினேன். ரணிலை பக்கத்தில் வைத்துக்கொண்ட நான் இதனை சொன்னேன்.
கேள்வி – தற்போது ஜனாதிபதியுடன் தானே இருக்கின்றீர்கள்?.
பதில் – இல்லை நாங்கள் ஜனாதிபதியுடன் இல்லை. எதிர்க்க வேண்டிய இடங்களில் எதிர்ப்போம்.
கேள்வி – மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்குவது பற்றி?
பதில் – பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்ட நாளில் உங்களுக்கு புரியும். முதலமைச்சரிடம் கும்பிட்டு கொண்டு இருக்க வேண்டிய நிலைமை ஏற்படும். ஈழம் வேண்டும் என்ற மக்களுக்கு சிறந்த போராட்ட கோஷத்தை வழங்க முடியும். இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பில்லை.
கமத்தொழிலில் ஈடுபவோருக்கு அவர்களின் காய்கறிகளை விற்பனை செய்ய முடியவில்லை. நெல்லை விற்க முடியவில்லை. சுயத்தொழில் நிறுவனங்கள் இல்லை. நான் தொழிற்சாலைகளை நிர்மாணித்த பின்னர், இதுவரை எந்த தொழிற்சாலையும் நிர்மாணிக்கப்படவில்லை. என்ன பேசுகிறார்கள்.
தனித்தனி நாடுகளை உருவாக்க முடியாது. நான் தமிழ் தலைவர்களுடன் கலந்துரையாடி உள்ளேன். தேனீர் அருந்தியுள்ளேன். ஒன்றாக சாப்பிட்டு இருக்கின்றேன். அழைத்தும் பேசியிருக்கின்றேன். பேசி விட்டு மாலை நேரத்தில் வேறு ஒன்றை பேசுவார்கள். ரணிலை ஆட்சிக்கு கொண்டு வந்தால், அவர்கள் எதனையும் தருவார்கள் என தமிழ் தலைவர்கள் நினைத்தனர்.
கேள்வி – ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் பயணிக்க முடியுமா?.
பதில் – பயணிக்க முடியும்.