பாரிசில் இடம்பெற்ற விருதுகள் பெற்ற ஆறு குறும்படங்களின் திரையிடல் (26.06.2016)
விருதுகள் பெற்ற ஆறு குறும்படங்களின் திரையிடல் பிரான்ஸ் தலைநகர் பரிசில் சிறப்பாக இடம்பெற்றது.
ஈழத் தமிழர் திரைப்பட சங்கத்தின் முன்னெடுப்பில் இடம்பெற்றிருந்த இத்திரையிடலில், புலம்பெயர் தேசங்களிலும், தமிழீழத் தாயகத்திலும் உருவாக்கப்பட்ட குறும்படங்கள் திரையிடப்பட்டிருந்தன.
திரை ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் பங்கெடுத்திருந்த இத்திரையிடலில், இவண் இராவணன், நினைவிருக்கும் வரை, தாத்தா, நானாக நான், Bilboquet, Your Destination ஆகிய குறும்படங்கள் திரையிடப்பட்டிருந்தன.
தொழில்நுட்பங்கள் நமக்கும் வசப்படும் என்ற புதிய நம்பிக்கையினை இக்குறும்படங்களை தந்த இளங்கலைஞர்கள் தந்திருக்கின்றார்கள், அத்தோடு கதை சொல்லல் முறையிலும் புதிய புதிய உத்திகளைக் கையாண்டு ஓர் பாய்ச்சலை இக் குறும்படங்கள் உணர்த்தியிருப்பதாவும் தனது உரையில் குறிப்பிட்டிருந்த கவிஞரும், சிற்பக்கலைஞருமாகிய சுபாஸ் அவர்கள், ஈழத்தவர்களின் தனித்துவமான அடையாள சினிமா போக்கில் இது முக்கியமhனது எனவும் தெரிவித்திருந்தார்.
திரையிடப்பட்டிருந்த குறும்பங்களில் பணியாற்றிய கலைஞர்களை பார்வையாளர்கள் முன் அறிமுகப்படுத்தி அக் குறும்படங்களுக்கான மதிப்பளித்தலும் இடம்பெற்றது. சமூக கலை ஆர்வலர்களான முகுந்தன், நாகேஸ், பாஸ்கரன், சுபாஸ், அனுஜனா, யோகு ஆகியோர் இந்த நினைவுப்பரிசில்களை வழங்கியிருந்தனர்.
புலம்பெயர் ஈழத்தவர் சினிமாவின் நீண்ட முயற்சிகளின் தொடர்சியாக, கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் தோற்றம் பெற்றிருந்த ஈழத்தமிழ் திரைப்பட சங்கம், இவ்வாறான சிறந்த முழுநீள மற்றும் குறும் திரைப்படங்களை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் பணியில் தொடர்ச்சியாக இயங்கிவருவதுடன், ஈழத்தமிழ் சினிமாவின் அடையாளத்தை நிறுவவும், அதற்கான தொழில்முறைக் கலைஞர்களை உருவாக்கவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அனைத்துலக வெளியில் புலம்பெயர்ந்து வாழுகின்ற கலைஞர்களின் படைப்பாளிகளின் ஈழத்தவர் சினிமா முன்னெடுப்புகளுக்கு இது காத்திரமான நம்பிக்கையினை தந்து வருகின்றமை குறிப்பிடதக்கது.
நன்றி Eelathamilar Thiraipada Sangam