பலாலி விமான நிலையம் தொடர்பிலான இறுதி முடிவு விரைவில்

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை அனைத்து வகையான விமானங்களும் தரையிறங்குவதற்கு ஏற்றதாக 3.1 கிலோ மீற்றர் நீளமான ஓடுபாதையுடன் மறுசீரமைப்பது தொடர்பில் கொழும்பில் இடம்பெறும் கலந்துரையாடலில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.
இந்த மறுசீரமைப்புப் பணிகளுக்கு 20 பில்லியன் ரூபா தேவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்துக்கு நேற்று வருகை தந்த ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சர் குழுவினர் பலாலி வானூர்தி நிலையத்துக்குச் சென்று அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் ஆராய்ந்தனர்.
பலாலி வானூர்தி நிலைய அபிவிருத்தி தொடர்பில் சிவில் வானூர்தித் திணைக்களத்தால் இரண்டு யோசனைகள் முன்வைக்கப்பட்டன.
1.5 கிலோ மீற்றர் நீளமான ஓடுபாதையை 10 பில்லியன் ரூபா செலவில் அமைப்பது. 3.1 கிலோ மீற்றர் நீளமான ஓடுபாதையை 20 பில்லியன் ரூபா செலவில் அமைப்பது.
இந்த இரண்டு யோசனைகள் தொடர்பில் ஆராயப்பட்டது. பலாலி விமான நிலையத்தில் இந்திய வானூர்திகள் மாத்திரம் தரையிறங்குவதற்கு 1.5 கிலோ மீற்றர் நீளமான ஓடுபாதை போதுமானது.
வேறு பெரிய விமானங்கள் தரையிறங்குவதற்கு 3.1 கிலோ மீற்றர் நீளமான ஓடுபாதை தேவை. நீண்ட கால நோக்கில் 3.1 கிலோ மீற்றர் நீளமான ஓடுபாதை அமைப்பதே பொருத்தமானது என்ற யோசனை முன்வைக்கப்பட்டது.
பருத்தித்துறை – பொன்னாலை வீதி மற்றும் வல்லை – அராலி வீதி இரண்டுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் 3.1 கிலோ மீற்றர் நீளமான ஓடுபாதையை அமைக்க முடியும் என்று கூறப்பட்டது.
இதற்கு மேலதிக காணிகளைச் சுவீகரிக்காமல் எப்படி அமைக்கலாம் என்பது பற்றி கொழும்பில் ஆராய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பன்னாட்டு வானூர்திகள் தரையிறங்குவதற்கு ‘நவிக்கேசன் லைட்ஸ்’ பொருத்துவது தொடர்பிலும் பிரஸ்தாபிக்கப்பட்டது. ஓடுபாதையிலிருந்து மேல் பக்கமாக 500 மீற்றரும், கீழ்ப்பக்கமாக 500 மீற்றரும் தேவை என்று கூறப்பட்டது.
அதற்கு பருத்தித்துறை – பொன்னாலை மற்றும் வல்லை – அராலி வீதி இரண்டுக்கும் அப்பால் அதனை அமைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பலாலி வானூர்தி அபிவிருத்தி தொடர்பில் எந்தவொரு இறுதி முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் நிறைவடைந்தது.
அத்துடன் காங்கேசன்துறை துறைமுகத்தையும் பிரதமர் தலைமையிலான குழுவினர் சென்று பார்வையிட்டனர்.
அங்கிருந்து தூத்துக்குடிக்கு டிங்கி படகில் பயணிகள் சேவையை இங்கிருந்து ஆரம்பிப்பது தொடர்பிலும் பேசப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை சிமெந்துக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான காணியில் கடற்படையினர் நிலை கொண்டுள்ளமையால், துறைமுக அபிவிருத்தி இடைஞ்சல் ஏற்படுகின்றமை தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.