வரலாறு ஒரு இனமதத்துக்கு மாத்திரம் சொந்தமானது அல்ல!
“வட கிழக்கில் காணக்கிடக்கும் பெளத்த சின்னங்கள் எல்லாமே, சிங்கள பெளத்த சின்னங்கள் என முடிவு செய்ய வேண்டாம்.
2ம் 3ம் நூற்றாண்டுகளில் தமிழகத்திலும், வடகிழக்கிலும் தமிழர் மத்தியில் பெளத்தம் பரவி விரவி இருந்தது என்பது வரலாறு.
ஆகவே இந்நாட்டின் வரலாறு ஒரு இனமதத்துக்கு மாத்திரம் சொந்தமானது என தீர்மானிக்க வேண்டாம்.
அப்படியானால் இந்நாட்டில் தேசிய ஒருமைப்பாட்டை என்னால் முன்னெடுக்க முடியாது” என தொல்பொருளாராய்ச்சி திணைக்கள பணிப்பாளர்-நாயகம் பேராசிரியர் மண்டாவெலவிடம், பாராளுமன்ற வளாகத்தில் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் நடைபெற்ற மத நல்லிணக்க தெரிவுக்குழு கூட்டத்தின்போது தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
சபாநாயகர் கருஜயசூரிய, முஸ்லிம் விவகார அமைச்சர் ஹலீம், கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க, திருகோணமலை பிரதேச காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்துக்கொண்ட இக்கூட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் அமைச்சர் மனோ கணேசனும், தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும், தொல்பொருளாராய்ச்சி திணைக்கள பணிப்பாளர்-நாயகம் பேராசிரியர் மண்டாவெலவிடம் சாரமாரியாக கேள்விகளை கேட்டனர்.
பாராளுமன்ற மத நல்லிணக்க தெரிவுக்குழு கூட்டத்தின்போது மேலும் பேசப்பட்டதாவது,
தொல்பொருளாராய்ச்சி திணைக்களத்தில் உருப்படியான தமிழ் தொல்பொருளாராய்ச்சியாளர் கிடையாது.
வடக்கு கிழக்கில் கண்ட கண்ட இடங்களில் எல்லாம் புத்தர் சிலை வைக்க நீங்கள் வழி செய்கிறீர்கள். உங்களுக்கு தமிழ் பெளத்தர்களை பற்றி தெரியுமா? இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டுகளில் இலங்கையின் வடக்கு கிழக்கிலும், தென்னிந்தியாவிலும் வாழ்ந்த தமிழர்கள் பெளத்த சமயத்தை தழுவி இருந்தார்கள்.
இன்று நீங்கள் வடக்கு கிழக்கில் எங்கேயாவது பெளத்த சின்னங்களை காணுவீர்கள் என்றால் அது, தமிழ் பெளத்த சின்னங்கள். அதை சிங்கள பெளத்த சின்னங்கள் என்று கூறி அத்துமீறிய குடியேற்றம் செய்கிறீர்கள்.
அடாத்தாக பெளத்த தேரர்களை அழைத்து சென்று புதிய விகாரைகளை கட்ட உதவுகிறீர்கள். திருகோணமலை, திருக்கேதீஸ்வரம் ஆகியவை தமிழ் சைவ தேவார பாடல்களில் இடம்பெற்ற தலங்கள். இவற்றின் கட்டுமான பணிகளுக்கு தடை போடுகிறீர்கள். வவுனியாவில் வெடுக்குநாறி மலை மீதான கோவிலுக்கு போகும் மலைப்பாதை படிக்கட்டுகளை அமைக்க தடை போடுகிறீர்கள்.
அப்படியானால் எப்படி சிவனொளிபாதமலைக்கு படிக்கட்டுகளை அனுமதித்தீர்கள்? நான் தேசிய ஒருமைப்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர். உங்கள் திணைக்களம் இப்படி நடந்துக்கொண்டால் எனக்கு இந்நாட்டில் தேசிய ஒருமைபாட்டை ஏற்படுத்த முடியாது.
இவைபற்றி நான் இனி கடுமையாக இருக்க போகிறேன் என அமைச்சர் மனோ கணேசன் தொல்பொருளாராய்ச்சி திணைக்கள பணிப்பாளர்-நாயகம் பேராசிரியர் மண்டாவெலவிடம் கேள்விகளை எழுப்பினார்.
திருகோணமலையில் காவல்துறையினரின் நேரடி ஆதரவுடனேயே திருகோணமலை தென்னமவராடியில் புத்தர் சிலை வைக்கப்பட்டது. அந்த சிலை வைப்புக்கு தொல்பொருளாராய்ச்சி திணைக்களம் துணை செய்கிறது. இதை நாம் அனுமதிக்க முடியாது. நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும் சமயத்தில் எப்படி ஒரு பெளத்த தேரர் அங்கே புத்தர் சிலையை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்? என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தொல்பொருளாராய்ச்சி திணைக்கள பணிப்பாளர்-நாயகம், திருகோணமலை பிரதேச காவல்துறை அத்தியட்சகர் ஆகியோரிடம் கேள்வி எழுப்பினார்.