எச்சரிக்கை தகவல் : உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் துரித உணவுகள்!
பீட்சா, பர்கர், ப்ரைடு ரைஸ் போன்ற துரித உணவுகளை(Fast foods) உட்கொள்வதால் பல்வேறு உடல் உபாதைகளுக்கு மனிதன் ஆளாகிறான்.
இந்த துரித உணவுகள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
துரித உணவு என்றால் என்ன?
புரதம், விட்டமின், கனிமச் சத்துக்கள் மிகக் குறைந்த அளவு அல்லது அறவே இல்லாமலும், மிகுந்த உப்பும், கொழுப்பும் கொண்ட உணவுகள் துரித உணவுகள் என்று வரையறுத்துள்ளது தேசிய சத்துணவு கழகம் (National Institute of Nutrition).
கலக்கப்படும் இரசாயனப் பொருட்கள்
துரித உணவு மையங்களில் விற்பனையாகும் அனைத்து உணவு வகைகளிலும் MSG(Mono sodium Glutamate) என்ற ரசாயன உப்பு கலக்கப்படுகிறது. பீட்சா, பர்கர், ப்ரைடு ரைஸ், நூடுல்ஸ் வகை போன்ற நிறைய உணவு வகைகளில் MSG சேர்க்கப்படுகிறது.
MSG ன் வாசனை மூளையின் ஹைபோதாலமஸ்(Hypothalmus) பகுதியை தூண்டுகிறது. ஹைபோதாலமஸ் இன்சுலின், அட்ரினலின் போன்றவை சுரப்பதையும் அதிகப்படுத்தும்.
இதனால் அதிகமாகவும் அடிக்கடி உணவு உண்ண வேண்டும் என்ற உணர்வு தூண்டப்படும். இதனால் பலர் அடிக்கடி மற்றும் அளவில்லாமல் இந்த உணவுகளை உட்கொள்கின்றனர்.
இதுமட்டுமல்லாமல், கோதுமையில் தவிடு நீக்கப்பட்டு சில இரசாயனப் பொருட்களைச் சேர்த்து வெண்மையாக்கப்படும் மைதாவை கொண்டு தயாரிக்கப்படும் புரோட்டா, நூடுல்ஸ், நாண், ருமாலி ரொட்டி, பன், சமோசா, பீட்சா, குல்ச்சா, பர்கர் போன்றவற்றில் நார்ச்சத்து என்பது இருக்காது.
மேலும் துரித உணவுகளில் சேர்க்கப்படும் சாயம், அஜினமோட்டோ போன்ற வேதிப்பொருட்கள் நமது குடலுக்கு ஆபத்தை விளைவிக்கும்.
ஏற்படும் தீமைகள்
- துரித உணவுகள் சாப்பிடுவதாலும், உடற்பயிற்சி செய்யாததாலும், நீரிழிவு நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதில் அலட்சியம் காட்டினால், உடலின் மற்ற உறுப்புக்கள் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.
- ஞாபக சக்தி குறைவு, கவனக் குறைவு, திட்டமிட்டு செயல்படும் திறன் குறைவு என பல பிரச்சனைகள் ஏற்படும்.
- தலைவலி, மனச்சோர்வு, உடல் சோர்வு , உடல் எடை அதிகரிப்பு, உணவுக்கு ஏங்குதல் போன்ற வியாதிகளும் உண்டாகும்.
- விபரீதங்கள், உணர்ச்சிகள் கட்டுக்குள் இல்லாமை, வயிற்று வலி, மூட்டு வலி, நாக்கு வீங்குதல் ஏற்படுவதுடன் நரம்பு செல்களும் மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகும். தவறான நடத்தைகளுக்கு மிக முக்கிய காரணமே MSG தான்.
- இன்றைய காலகட்டத்தில் பெண்கள் சிறுவயதிலேயே பருவம் அடைகின்றனர். இதற்குப் பல காரணங்கள் உண்டு, எனினும் நம்முடைய உணவுப் பழக்கத்துக்கு அதில் முக்கிய இடம் உண்டு. பெண்கள் பருவம் அடைவதற்கு காரணமான ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோனை அதிகம் சுரக்கச் செய்வதில் பதப்படுத்தப்பட்ட துரித உணவுகளுக்கு முக்கிய இடம் உண்டு.
- மேலும், தினமும் துரித உணவைச் சாப்பிடும் குழந்தைகளில் அறுபது வீதம் பேர் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் உடற் பருமனால் பாதிக்கப்படுகின்றனர்.
- நொறுக்குத்தீனி, துரித உணவுக் கலாசாரத்துக்கு ஆட்பட்ட இளைஞர்களுக்கு உயிரணுக்களில் பாதிப்பு ஏற்படுகின்றன என சமீபத்தில் ஹார்வர்ட் பல்கலைக்கழகமும் முர்சியா பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
- வருங்கால சந்ததியினரின் ஆரோக்கியத்திற்கு துரித வகை உணவு பெரும் ஆபத்து என்பது மறுப்பதற்கு இல்லை.