கழிவுகள் கொட்டுவதற்கு வேறு காணி கொள்வனவு செய்யப்படும்.
பருத்தித்துறை நகரசபையால் கழிவுகள் கொட்டுவதற்காக முதலில் தெரிவுசெய்த காணியினை தவிர்த்து வேறு காணி ஒன்றை கொள்வனவு செய்வதாக கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
பருத்தித்துறை நகரசபையினரினால் தமது பகுதிகளிற்குள் சேகரிக்கப்படும் கழிவுகள் பருத்தித்துறை – மருமருதங்கேணி வீதிக்கு அருகாமையில் கொட்டப்பட்டு வந்தது.
அதனை நிறுத்துமாறு பருத்தித்துறை பிரதேசசபையால் பருத்தித்துறை நகரசபைக்கு கடிதம் அனுப்பப்பட்ட நிலையில் கழிவுகளை கொட்டுவதற்காக வல்லிபுரம்- துன்னாலை வீதியில் உள்ள காணி ஒன்று கொள்வனவு செய்வதற்காக நகரசபையால் தெரிவு செய்யப்பட்டிருந்தது.
ஆனாால் அக் காணி வல்லிபு ஆழ்வார் ஆலயத்திற்கு செல்லும் வீதியில் அமைந்திருப்பதனாலும், அதுவும் வீதிக்கு அருகாமையில் காணி இருப்பதனாலும் கழிவுகள் கொட்ட அனுமதிக்க முடியாது என பருத்தித்துறை பிரதேசசபை உறுப்பினர்களினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் இது தொடர்பில் ஆராய்வதற்காக கலந்துரையாடல் ஒன்று பருத்தித்துறை பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலாளர் ஆழ்வாப்பிள்ளை ஸ்ரீ தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை முற்பகல் நடைபெற்றது.
இதில் முன்னர் தெரிவு செய்யப்பட்ட துன்னாலை- வல்லிபும் வீதியில் உள்ள காணியினை தவிர்த்து அதற்கு அப்பால் உள்ள காணி ஒன்றினை தெரிவு செய்வதாக தீர்மானித்து அது தொடர்பில் சுற்றுச்சூழல் திணைக்களத்திற்கு அறிவிப்பது என தீர்மானிக்கப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் பருத்தித்துறை பிரதேசசபை தவிசாளர் அ. சா.அரியகுமார், பருத்தித்துறை நகரசபையின் தவிசாளர் இருதயராசா, பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி ஜி.செந்தூரன், சுற்றுச்சூழல் திணைக்கள அதிகாரி, பருத்தித்துறை பிரதேசசபை, பருத்தித்துறை நகரசபை ஆகியவற்றின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.