பிரதமரின் உரை உணர்த்தும் செய்தி என்ன?
போர்க்குற்ற விசாரணைகள் வேண்டாமென கூறிய பிரதமரின் கருத்து, தமிழர்கள் தொடர்ந்தும் அழிக்கப்படுவர் எனும் எண்ணக்கருவை தோற்றுவிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் கலந்துகொண்டு, போர்க்குற்ற விசாரணைகள் வேண்டாம். மறப்போம், மன்னிப்போம் என கிளிநொச்சியில் பிரதமர் உரையாற்றியமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர்,
“இலங்கை அரசாங்கத்தினால் எந்த மக்கள் படுகொலை செய்யப்பட்டார்களோ, அந்த மக்களின் மண்ணிலிருந்து ஒரு புதுவிதமான கருத்தை பிரதமர் தெரிவித்துள்ளார்.
மறப்போம், மன்னிப்போம் என்ற வார்த்தைகளோடு, எல்லாவற்றையும் மூடி விடுகின்ற செயற்பாட்டை முன்னெடுத்துள்ளார்.
4 இலட்சத்திற்கு அதிகமான மக்கள் முள்ளிவாய்க்கால் வரை சென்ற போது, 75 ஆயிரம் பேர் தான் இருந்ததாக, பொருளாதார தடைகளை விதித்து, இதே இலங்கை அரசாங்கம் கொலை செய்தபோது, கருத்துக்களை வெளியிடாத பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தற்போதைய கருத்து, இன்னும் உங்களை அழிப்போம் எனும் எண்ணக்கருவுடன் தென்படுகின்றது” என தெரிவித்துள்ளார்.