மாத்தளை முத்துமாரியம்மன் பஞ்சரத பவனி
மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மாசிமக மகோற்சவ பஞ்சரத பவனி இன்று 19ம் திகதி நடைபெறுகிறது.நாளை 20ம் திகதி கற்பூரத் திருவிழாவும், 21ம் திகதி பாற்குட ஊர்வலம், தீர்த்தோற்சவம்,கொடியிறக்கம் ஆகியனவும் நடைபெறும்.
22ம் திகதி ஸ்ரீ சண்டேஸ்வரிஉற்சவமும், அதனைத் தொடர்ந்து 26ம் திகதி வைரவர் பூஜையும் நடைபெறுகின்றன.
இவ்வாலயம் மத்தியமாகாண கண்டி இராசதானியிலிருந்து 16வது மைல்கல் தொலைவில் அமைந்திருப்பதோடு வடக்கையும்,மலையகத்தையும் இணைக்கும் ஒரு கேந்திர தலமாகவும் மாத்தளை நகரில் விளங்குகின்றது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பெருந்தோட்டத்துறைக்கு இந்தியாவிலிருந்து தமிழ் மக்கள் தலைமன்னார் மற்றும் அரிப்பு இறங்கு துறையூடாக அழைத்து வரப்பட்டு மலையக தலைவாசலான ‘பண்ணாகமம்’ என்று அப்போது அழைக்கப்பட்டு வந்த மாத்தளையை வந்தடைந்தனர்.
மன்னாரிலிருந்து காட்டு வழியாக கால்நடையாக வரும் போது முன்வந்தவர்கள் தாம் வந்து சேர்ந்து விட்டோம் என்பதற்காக அடையாளத்தை பாதையில் ஏற்படுத்துவர். அவ்வாறான அடையாளங்களில் கற்கள் அதில் முக்கிய இடத்தைப் பெற்றன.
இவ்வாறு அடையாளத்தின் வழி தோன்றியதே மாத்தளை முத்துமாரியம்மன் ஆலயம் என்பது வரலாறு கூறும் விடயமாகும்.
இருப்பினும் ‘அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான வரலாறு’ என்ற நூலின் பார்வையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மன்னாரிலிருந்து காட்டுவழியாக கால்நடையாக பெரும் துன்பப்பட்டு மாத்தளையை வந்தடைந்த மக்கள், இங்கிருந்து சிறுசிறு குழுக்களாக மலையக பெருந்தோட்டங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இப்படி சிறுசிறு குழுக்களாக மலையகமெங்கும் வியாபித்து மக்கள் மாத்தளையிலும் குடியேறினர்.
எங்கும் வியாபித்து அடியவர்களுக்கு அருள் மழை பொழியும் அன்னை பராசக்தியான ஸ்ரீ முத்துமாரியம்மன் ஒரு அட யாரின் கனவில் தோன்றி தன் திரு உருவத்தை ஒரு வில்வமரத்தடியில் வெளிப்படுத்தி தன்னை பூஜிக்குமாறு கேட்டுக் கொண்டதிற்கிணங்க அன்றிலிருந்து அவ்வில்வ மரத்தடியில் சிலை வைத்து வணங்கி வந்ததாக ஆரம்ப கர்ண பரம்பரைக்கதைகளும் ,ஏடுகளும் சான்று பகிர்வதாக அந்நூல் கூறுகின்றது.
மேலும் அக்காலத்தில் இவ்வாலயத்திற்கு முன்பாக ஒரு சிறிய மடம் இருந்துள்ளது.
இவ்வழியில் நெடுந்தூரம் கால்நடையாக வருபவர்களும்,வியாபார நோக்கோடு வருபவர்களும் வெவ்வேறு இடங்களுக்குச் செல்பவர்களும் மாட்டு வண்டிகளில் பயணம் செய்பவர்களும் ,இம்மடத்தில் தங்கியிருந்து சமைத்து உணவருந்தி களைப்பாறி,வண்டிகளை இழுத்து வந்த மாடுகளுக்கு தண்ணீர் கொடுத்து தாகத்தை தீர்த்து,அம்பிகையைய ம் தரிசித்து செல்வது வழக்கத்திலிருந்துள்ளது.
இம்மடத்தில் விஸ்வபிரம்ம குலத்தை சேர்ந்த ஆசாரியார் ஒருவர் தங்கியிருந்து,இம்மடத்தில் தங்கிச் செல்லும் வழிப்போக்கர்களுக்கு உதவிகள் செய்து கொடுப்படதுடன் இம்மடத்தை பராமரித்து வந்துள்ளார்.
இம்மடத்திற்கு பக்கமாக அழகுமலையிலிருந்து ஒர் ஓடை கிழக்கு நோக்கி செல்கின்றது.
மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயமானது மலையக மக்களின் வரலாற்று பூர்விகத்தோடும் பாரம்பரியத்தோடும் பின்னிப்பிணைந்துள்ள ஒரு ஆலயம்.
வரலாற்றுக் கூற்றுகளின்படி கால்நடையாக வந்த மக்கள் வழிகளில் அடையாளங்களை ஏற்படுத்திருந்தனர் என்ற தகவல் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான வரலாற்று நூலில் ‘மடம்’ என்ற தகவலினுடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்படி விடயங்களிலிருந்து பார்க்கும் போது தகவல் பல்வேறுபட்டதாகவிருப்பினும், கருத்து என்பது மலையக மக்களின் வரலாற்றோடு தொடர்புபட்டது என்பது புலனாகின்றது.