பொறுப்புக்கூறல் இல்லாத நல்லிணக்கம் நின்று நிலைக்குமா?
இலங்கையில் ஆயுதப்போராட்டம், மிலேச்சத்தனமான முறையில் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு எதிர்வரும் மே மாதத்துடன் 10வருடங்கள் ஆகின்றன. எனினும் இந்த மூன்று தசாப்த கால போரில் குறிப்பாக போரின் இறுதி நாட்களில் கட்டவிழ்த்துவிடப்பட்ட பாரிய மனித உரிமை மீறல்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றச்சாட்டுக்கள் போன்றவை தொடர்பில் இன்னமும் காத்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமையும் குற்றமிழைத்தவர்கள் நீதிக்கு முன் கொண்டுவரப்படாமையும் எதிர்காலம் தொடர்பாக பெரும் கேள்விகளை எழுப்பி நிற்கின்றன.
கடந்த வாரம் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க போரின் போது நிகழ்ந்தவற்றை மறப்போம் மன்னிப்போம் அன்பை நாம் வளர்ப்போம் என்றவகையில் கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கின்றார். கேட்பதற்கு அவை இதமாகத்தான் இருக்கின்றன.
ஆனால் இலங்கையின் கடந்த கால வரலாற்றைப்பார்த்தால் சிறுபான்மை மக்களுக்கு எதிராக குறிப்பாக தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு இதுவரையில் ஏற்றுக்கொள்ளக்கூடியதான எவ்விதமான தீர்வுகளும் வழங்கப்படவில்லை.
ஒவ்வொரு கலவரத்தின் பின்பும் ஆறுதல் வார்த்தைகள் வீசப்படுவதும் வாக்குறுதிகள் அடுக்கப்படுவதும் வெளி அலங்காரமாக சில செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதும் வாடிக்கையாகிக்கிடக்கின்றதே தவிர இதயத்தின் ஆழத்தில் இருந்து உண்மையாக நல்லிணக்கமோ பொறுப்புக்கூறலோ முன்னெடுக்கப்படவில்லை அதனை முன்னெடுப்பதற்கான எண்ணத்தை ஆட்சியில் இருப்பவர்கள் கொண்டிருக்கவில்லை என்பதே உண்மை.
தமிழர்களுக்கு எதிராக இதுவரையில் பல கலவரங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. இவற்றில் உயிரிழப்புக்கள் உடமை இழப்புக்கள் மட்டுமன்றி உளவியல்ரீதியாக தமிழர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களும் சொல்லிடங்காதவை.
தமிழர்களுக்கு எதிராக எதைவேண்டுமானாலும் செய்யமுடியும். கேட்க நாதியில்லாத சமூகம் என்ற பாங்கில் குற்றவாளிகளை நீதிக்கு முன் நிறுத்தாத எவ்வித விசாரணைகளையும் நடத்தாத போக்கே மேலோங்கியிருக்கின்றது.
இதுவரை இடம்பெற்ற கலவரங்களைவிடவும் பரிமாணத்தில் மிகப் பெரியதான 2009 இறுதியுத்தின் போது யுத்தத்தை முன்னெடுக்கின்றோம் முடிவிற்கு கொண்டுவருகின்றோம் என்ற போர்வையில் நிகழ்த்தப்பட்ட பாரிய மனித உரிமை மீறல்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ஏன் அதனிலும் மேலாக போர்க்குற்றங்கள் தொடர்பில் இதுவரை முறையான விசாரணைகள் ஏதும் நடத்தப்படாமை குற்றமிழைத்தவர்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் இடம்பெறுமா என்ற சந்தேகங்களை வலுப்படுத்தி நிற்கின்றது.
இலங்கையில் நின்று நிலைக்கக்கூடிய நல்லிணக்கம் உறுதிசெய்யப்படவேண்டுமாக இருந்தால் கடந்தகால த்தை மறந்து மன்னித்துவிட்டு அதனைச் செய்யமுடியாது.
மாறாக கடந்த காலத்தில் இடம்பெற்றவைதொடர்பாக முறையான விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மை வெளிக்கொண்டுவரப்பட்டு அது நன்கு ஆவணப்படுத்தப்பட்ட பின்னரே மன்னிப்பைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.
அதனைவிட்டு இப்போதே மறப்போம் மன்னிப்போம் என்று பேசி யுத்தத்தின் போது கொடுங்குற்றங்களை இழைத்தவர்களை பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தாது விட்டுவிட்டால் மீண்டுமாக இதேவிதமான அன்றேல் மோசமான மனித உரிமை மீறல்கள் எது இனத்தின் மீது கட்டவிழ்த்துவிடப்படலாம் என்பதை நினைவிற்கொள்ளவேண்டும்.
இதற்கு வரலாற்றில் இருந்தே நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும். எனவே கடந்தகால யுத்தம் போன்றவை மீள நிகழாது இருப்பதற்கு தேவையான நின்று நிலைக்கக்கூடிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பொறுப்புக்கூறல் இன்றி அமையாதது. பொறுப்புக்கூறல் இன்றி நின்று நிலைக்கக்கூடிய நல்லிணக்கமும் ஒரு போதும் சாத்தியப்படாது.