முச்சக்கர வண்டி சாரதிகள் சட்டத்திற்கு முரணாக செயல்பட முடியாது!

முச்சக்கர வண்டி சாரதிகள் சட்டத்திற்கு முரணாக செயல்பட முடியாது!

மட்டக்களப்பு முச்சக்கரவண்டி சங்கங்கள் சட்டத்துக்கு முரணாக செயற்படுமாயின் மாநகரசபை பொறுப்பெடுத்து மிக விரைவில் நகரத்துக்குள் இலவசசேவையை ஆரம்பிக்கும் என மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு முச்சக்கர வண்டி சாரதிகள் நலன்புரிச் சங்கத்திற்கு எதிராக மட்டக்களப்பு மாநகர மேயர் செயற்படுவதை கண்டித்து முச்சக்கர வண்டி சாரதிகளினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,

“கடந்த 19ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலில் மாநகரசபை கட்டளைச் சட்டம் 372இன் கீழ் 32ஆம் பிரிவின்படி அனைத்து முச்சக்கரவண்டி சாரதிகளும் தமது வியாபார நடவடிக்கைகளின்படி மாநகரசபையில் பதிவுசெய்யப்படவேண்டும் என சில விதிமுறைகளை விதித்தோம்.

இருப்பினும் இதுவரை எந்தவொரு முச்சக்கரவண்டி சாரதிகளும் குறித்த சட்டத்தின் கீழ் பதிவுசெய்யவில்லை. அதன் காரணமாக ஏதேனும் முச்சக்கர வண்டி குறித்த முறைப்பாடொன்று கிடைக்கபெறும் பட்சத்தில் அது தொடர்பிலான எந்தவொரு நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாதுள்ளது.

இவ்வாறு பதிவுசெய்துள்ள முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு குறித்த முச்சக்கரவண்டிகளுக்கான தரிப்பிடம் வழங்கப்படும் அதேவேளை. பதிவுசெய்யப்படாத முச்சக்கரவண்டிகளின் செயற்பாடுகளுக்கு தடைவிதிக்கப்படும்.

குறித்த போராட்டமானது சட்டத்தை மீறும் செயலாகும். மாநகரசபை நியதிச் சட்டத்தை அமுல்படுத்தும் போது அதை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் அனுசரித்து செயற்படவேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Copyright © 6782 Mukadu · All rights reserved · designed by Speed IT net