இராணுவத்தினரால் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ்! யாழ். நீதிமன்றில் அரச தரப்பு
நாவற்குழியில் இலங்கை இராணுவத்தினரின் சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு ஊடகம் ஒன்று இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளது.
நாவற்குழியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு அவர்களது உறவினர்கள் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்துள்ள நிலையிலேயே அரச தரப்பு சட்டத்தரணி அவர்களுக்கு மரணச் சான்றிதழ் தரமுடியும் என பதிலளித்துள்ளார்.
1996ஆம் ஆண்டு நாவற்குழி இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியாகவிருந்த லெப். துமிந்த கெப்பிட்டிவலன்ன தலைமையிலான படையினர், கைது செய்து கொண்டு சென்ற 24 இளைஞர்கள் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டனர்.
அவர்களில் 3 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக, அவர்களது பெற்றோரால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுக்கள் நேற்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில், முதலாம் பிரதிவாதியான இராணுவ அதிகாரி லெப். துமிந்த கெப்பிட்டிவலன்ன மற்றும் மூன்றாம் பிரதிவாதியான சட்ட மா அதிபர் ஆகியோர் சார்பில், பிரதி சொலிசிற்றர் ஜெனரல் சைத்ய குணசேகர முன்னிலையானார்.
காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பில் என்ன நிவாரணத்தை எதிர்பார்க்கிறீர்கள் என்று, மனுதாரர்களிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
அதற்கு, மனுதாரர்கள் தரப்பு சட்டவாளர் கு.குருபரன், நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் உயிருடன் இருக்கிறார்களா, அவர்கள் எங்கு இருக்கிறார்களா? அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது? என்பதை சட்ட மா அதிபர் உள்ளிட்ட பிரதிவாதிகள் வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஆனால், அதற்குப் பதிலளிக்காத பிரதிவாதிகள் தரப்பு சட்டவாளரான பிரதி சொலிசிற்றர் ஜெனரல், சைத்ய குணசேகர, காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பில் இறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பித்தால் அதனை வழங்கத் தயார் என்று கூறினார்.
அவரது பதிலை நிராகரித்த மனுதாரர்களின் சட்டத்தரணி, கு.குருபரன், இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்பதே எமது கோரிக்கை என தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதிமன்றம், இந்த வழக்கை எதிர்வரும் 18ஆம் திகதி ஒத்திவைத்துள்ளது.