சுண்டுக்குளி மாணவி கிரிசாந்தி குமாரசுவாமி கொலை வழக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்து விசாரணைகள் முன்னெடுக்கப்படாத நிலையில் எதற்காக புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதனின் கொலை வழக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது என ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் சட்டத்தரணி கேள்வி எழுப்பி இருந்தார்.
ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் தாயாரை அச்சுறுத்தியமை தொடர்பான வழக்கு விசாரணை பதில் நீதவான் இ.சபேசன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
குறித்த வழக்கில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த மகாலிங்கம் தவநிதி என்பவர் சிறைச்சாலையில் , உயிரிழந்த நிலையில் , அவருடன் தடுத்து வைக்கப்பட்டு இருந்த மற்றுமொரு சந்தேக நபரான சிவதேவன் செல்வராணி மன்றில் முன்னிலைப்படுத்த ப்பட்டார்.
குறித்த சந்தேக நபரை இன்றைய தினம் பிணையில் விடுதலை செய்ய வேண்டும் என கோரி சந்தேக நபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ரகுபதி மன்றில் விண்ணப்பம் செய்தார்.
பிணை விண்ணப்பத்தின் போதே ,மேற்கண்டவாறு தெரிவித்து இருந்தார். மேலும் தெரிவிக்கையில் ,
மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டது மிக கொடூரமானது.அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. ஆனால் வித்தியாவின் படுகொலை மாத்திரம் தான் இலங்கையில் கொடூரமான கொலையா ? இதற்கு முன்னர் இவ்வாறன கொலை நடைபெறவில்லையா ?
சுண்டுக்குளி மாணவி கிரிசாந்தி குமாரசுவாமி கொலை கொடூரமான கொலை இல்லையா ? ஏன் அந்த கொலை வழக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்படவில்லை ?
வித்தியாவின் கொலை வழக்கு பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் விசாரணை செய்ய முற்பட்டது ஏன் ? உண்மையான குற்றவாளிகளை தப்ப வைப்பதற்கான முயற்சியா ?
மாணவியின் கொலை சம்பவத்தின் பின்னர் மக்களின் இயல்வு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்பட்டது. அந்த பாதிப்பு ஏற்பட பொலிசார் ஏன் அனுமதித்தனர் ? என பல கேள்விகளை தனது பிணை விண்ணப்பத்தின் போது சட்டத்தரணி முன் வைத்து இருந்தார்.
எனினும் குறித்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியங்களை பாதுகாக்கும் சட்டத்தின் பிரகாரம் நீதவான் நீதிமன்ற நியாயதிக்கத்திற்கு சந்தேக நபருக்கு பிணை வழங்கும் இல்லாத காரணத்தால் பிணை விண்ணப்பத்தினை நீதவான் நிராகரித்தார்.
யாழ்ப்பாணம் இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் வந்த பின்னர் கடந்த 1996ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 7ம் திகதி சுண்டுக்குளி மாணவி ஒருவர் இராணுவ வாகனம் மோதி உயிரிழந்தார்.
தென்மராட்சி பகுதியில் உள்ள மாணவியின் வீட்டில் நடைபெற்ற மாணவியின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு விட்டு பாடசாலை சீருடையுடன் கிரிசாந்தி வீடு திரும்புகையில் யாழ்.வளைவுக்கு அருகில் செம்மணி பகுதியில் இருந்த இராணுவ முகாமில் தடுத்து நிறுத்தபட்டு விசாரணைக்கு என இராணுவ முகாமுக்குள் அழைத்து செல்லப்பட்டார்.
மாணவியின் இறுதி சடங்குக்கு சென்ற தமது மகளான கிரிசாந்தியை காணவில்லை என தேடி சென்ற தாயும் , கிரிசாந்தியும் தம்பியும் குறித்த இராணுவ முகாமில் விசாரித்த போது அவர்களையும் இராணுவ முகாமுக்குள் அழைத்து செல்லப்பட்டனர்.
மகளை தேடி சென்ற தாயையும் , மகனையும் காணவில்லை என கிரிசாந்தி வீட்டிற்கு அயலில் உள்ள அயலவர் தேடி சென்று குறித்த இராணுவ முகாமில் விசாரித்த போது , அவரையும் இராணுவ முகாமுக்குள் அழைத்து சென்றனர்.
இவ்வாறு அழைத்து செல்லப்பட்ட கிரிசாந்தியின் தாய் , தம்பி , மற்றும் அயலவர் ஆகிய மூவரையும் இராணுவத்தினர் இரவு பத்து மணியளவில் கழுத்தை கயிற்றினால் இறுக்கி கொலை செய்தனர்.
கொலை செய்யப்பட்ட மூவரில் இருவரை ஒரு கிடங்கிலும் மற்றவரை வேறு ஒரு கிடங்கிலும் புதைத்தனர்.
அதன் பின்னர் மாணவி கிரிசாந்தியை நள்ளிரவு பதினோரு பேர் இணைந்து கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்தனர்.
இந்த படுகொலை சம்பவத்தினை அடுத்து யாழ்ப்பணத்தில் பெரும் கொந்தளிப்பு காணப்பட்டதுடன் , பாராளுமன்றம் சர்வதேசம் எங்கும் முக்கிய பேசு பொருளாக இருந்தது.
அதனை தொடர்ந்து அந்த கொலை சம்பவம் தொடர்பில் ஏழு இராணுவத்தினரும் இரண்டு பொலிசாரும் கைது செய்யப்பட்டனர்.
குளோபல் தமிழ்