இரு கட்சிகள் ஒன்றிணைந்த நிலையை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியும்!
இரு கட்சிகள் ஒன்றிணைந்த நிலையை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கை தனக்குள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டின் ஆளுந்தரப்பு உறுப்பினர் ஒருவர் எதிர்தரப்பு உறுப்பினரை பொதுமேடை ஒன்றில் பெருமையான விதத்தில் பேசுகின்ற கலாசாரம் கடந்த காலங்களில் இருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேற்று (புதன்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டில் எதிரெதிர் துருவங்களாக இருந்த முக்கிய இரு கட்சிகளை இணைய வைத்ததன் ஊடாக கடந்த 2015 இல் ஒன்றிணைந்த கலாசாரத்தை நாங்கள் உருவாக்கினோம்.
தற்போது அந்நிலையில் மாறுதல் ஏற்பட்டுள்ளமையானது மிகுந்த கவலையளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, அன்று ஏற்படுத்தப்பட்ட ஒன்றிணைந்த செயற்பாட்டை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்பதுடன் அதனை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையும் தனக்குள்ளதாக சந்திரிகா குமாரதுங்க மேலும் தெரிவித்தார்.