இரும்புக் கம்பி எவ்வாறு உக்காமல் இருந்தது!

மனித எச்சங்கள், 600 வருடங்கள் பழைமையானவை என்றால் இரும்புக் கம்பி எவ்வாறு உக்காமல் இருந்தது!

மன்னார் மனித எலும்புக்கூடுகளின் கார்பன் பரிசோதனை அறிக்கை குறித்து, மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள், 600 வருடங்கள் பழைமையானவை என்றால் அதிலிருந்து இரும்புக் கம்பி எவ்வாறு உக்காமல் இருந்தது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மன்னாரில் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

”நீதிமன்றத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் எலும்புக்கூடுகளின் காலப்பகுதியினுடைய நிர்ணயம் சரியான முறையில் தெளிவுபடுத்தல் போதாமையாக இருக்கின்றது.

அவ்வாறான காலப்பகுதியில் அந்த சம்பவம் நடைபெற்றிருக்குமாக இருந்தால் ஒரு எலும்புக்கூட்டிலே இரும்பு கம்பியால் பிணைக்கப்பட்டிருந்தது கண்டெடுக்கப்பட்டது. இந்த 600 ஆண்டுகளுக்குள் இரும்புக்கம்பி உக்கி அழிந்து விடாமல் இருக்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது.

அத்துடன் அங்கு பிஸ்கட் பொதி செய்யும் பேப்பரும் கண்டெடுக்கப்பட்டது. இந்த இரண்டு ஆவணங்களும் இந்த 600 ஆண்டுகளுக்கு முற்பட்டதா என்ற சந்தேகம் எமக்கு உள்ளது“ என குறிப்பிட்டார்.

Copyright © 7051 Mukadu · All rights reserved · designed by Speed IT net