வவுனியாவில் கடத்தப்பட்ட எட்டு வயது சிறுவன்: தாய் உட்பட மூவருக்கு விளக்கமறியல்!
வவுனியாவில் எட்டு வயது சிறுவன் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அச்சிறுவனின் தாய் உட்பட மூவர் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பெரியமடு பகுதியில் வசித்து வந்த திலிபரஞ்சன் தமிழவன் என்ற சிறுவன் கடந்த புதன்கிழமை 5 மணியளவில் காணாமல் போனதாகவும், தனது வீட்டில் இருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்ததாக, கனகராயன்குளம் பொலிஸில் சிறுவனின் தாயாரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் வெளிநாட்டு முகவர் ஒருவர் தானே குழந்தையை கடத்தியதாகவும், 35 இலட்சம் தந்தால் சிறுவனை விடுவிப்பதாகவும் தாயின் தொலைபேசிக்கு இரண்டு தடவைகள் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதாகவும், கடத்தப்பட்ட சிறுவனும் தொலைபேசியில் பேசியதாகவும் தாயார் பொலிஸ் விசாரணையில் தெரிவித்திருந்தார்.
குறித்த தொலைபேசி இலக்கங்களை பெற்றுக் கொண்ட கனகராயன்குளம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர். அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா, ஓமந்தை, புளியங்குளம் உட்பட பல பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்திருந்தனர்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் வவுனியா, ஓமந்தையில் உள்ள வீடு ஒன்றில் இருந்து குறித்த சிறுவனை நேற்று அதிகாலை புளியங்குளம் பொலிஸார் மீட்டனர்.
குறித்த சிறுவனை கடத்தி வைத்திருந்ததாக சிறுவனின் தாயார், தாயின் சகோதரர் மற்றும் தாயின் சித்தப்பா ஆகியோர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்த மோட்டர்சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யபட்ட நபர்களை புளியங்குளம் பொலிஸார், கனகராயன்குளம் பொலிஸாரிடம் நேற்று மதியம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மூவரும் வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையிலேயே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.