ஜெனீவா செல்லும் ஆளுநர் வடக்கு மக்கள் சார்பில் பேசமுடியாது!
ஜெனீவா செல்லும் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் ஜனாதிபதியின் முகவராக மட்டுமே உரையாற்ற வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதனைவிடுத்து வடக்கு மக்களின் சார்ப்பாக எதனையும் பேசக்கூடாது எனக் குறிப்பிட்டுள்ளது.
அவர் வடக்கு மக்கள் சார்பில் பேசினால் அதற்கு உடனடியாக மாற்று நடவடிக்கை எடுக்க நேரிடும் என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எச்சரித்துள்ளார்.
யாழில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“வடக்கு ஆளுநர் ஜெனீவா செல்வது குறித்து எமது மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை. அவர் மக்களால் தெரிவுசெய்யப்பட்டவரல்ல.
அவர் ஜனாதிபதியாலே நியமிக்கப்பட்ட ஜனாதிபதியின் முகவர். ஆகவே அவர் ஜனாதிபதியின் கூற்றுக்கு ஏற்றவாறே நடப்பார்.
இதனால்தான் மாகாண சபைகளுடைய முதலமைச்சர்களும் ஆளுநர்களின் அதிகாரங்களை முழுதாக நீக்கவேண்டும் என பரிந்துரை செய்துள்ளார்கள்.
இதனிடையே ஜனாதிபதியின் முகவர் வடக்கு மக்கள் சார்பிலே எதனையும் ஜெனீவாவில் பேசமுடியாது. அப்படி அவர் பேசுவாராக இருந்தால் அதற்கு மாற்று நடவடிக்கையை நாங்கள் எடுக்க நேரிடும்” என்று குறிப்பிட்டார்.