பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தெரிவுக் குழுத் தலைவராக முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் இன்ஸமாம் உல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார்..
இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்றுநர் பதவியிலிருந்து விலகிக்கொள்வதாக இன்ஸமாம் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் அண்மையில் நடைபெற்ற உலக இருபது 20 கிரிக்கெட் போட்டிகளின் சுப்பர் 10 சுற்றுக்கு ஆப்கானிஸ்தானை இன்ஸமாம் முன்னேற்றியிருந்தார். அப் போட்டியில் சம்பியனான மேற்கிந்தியத் தீவுகளை கடைசி லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றிகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ் வருட இறுதிவரை ஆப்கானிஸ்தானுடன் இன்ஸமாம் ஒப்பந்தம் செய்துகொண்டிருந்தார்.
எனினும் இன்ஸமாமை விடுவிக்குமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் ஷஹாரியார் கான் கோரியதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் ஷவிக் ஸ்டனிக்ஸாய் தெரிவித்தார்.
தனது நான்கு போட்டிகளில் மூன்றில் தோல்வி அடைந்ததால் உலக இருபது கிரிக்கெட்டிலிருந்து பாகிஸ்தான் வெளியேறியதை அடுத்து அணித் தலைவர் ஷஹித் அவ்றிடி, தலைமைப் பயிற்றுநர் வக்கார் யூனிஸ் ஆகியோர் தங்களது பதவிகளிலிருந்து விலக நேரிட்டது.
1992 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளில் பாகிஸ்தான் சம்பியனாவதற்கு பிரதான பங்காற்றியிருந்த இன்ஸமாம் உல் ஹக், 120 டெஸ்ட் போட்டிகளிலும் 378 சர்வதேச ஒருநாள் கிரிக்ெகட் போட்டிகளிலும் விளையாடியிருந்தார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தெரிவுக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இன்ஸமாம், அதற்கும் மேலாக தலைமைப் பயிற்றுநராக பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் நியமிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.