தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர் நா முத்துக்குமார் இன்று மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 41. சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை இரண்டு முறை வென்றவர் கவிஞர் முத்துக்குமார்.
காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தில் ஜூலை 12, 1975-ம் ஆண்டு பிறந்தவர் நா முத்துக்குமார். காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் கல்விப் படிப்பை முடித்தவர், ஆரம்ப நாட்களிலிருந்தே எழுவதில் நாட்டம் கொண்டார். பிரபல இயக்குநர் மறைந்த பாலு மகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.
இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான் மூலம் வீரநடை படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார். அதன் பிறகு ஏராளமான படங்களுக்கு பாடல்கள் எழுதினார். தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர்கள் அத்தனைப் பேருடனும் பணியாற்றியவர் நா முத்துக்குமார். இளையராஜா, ஏ ஆர் ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ்குமார், ஹாரிஸ் ஜெயராஜ் என அத்தனைப் பேருடனும் மிகவும் நட்பாகவும் இணக்கமாகவும் இருந்தவர் நா முத்துக்குமார். குறிப்பாக யுவன் சங்கர் ராஜா, ஜிவி பிரகாஷுக்கு மிக நெருக்கமான நண்பராகத் திகழ்ந்தார். யுவன் சங்கர் ராஜா இசையில் தங்க மீன்கள் படத்துக்காக இவர் எழுதிய ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்… ‘ பாடலுக்கு முதல் தேசிய விருதினை வென்றார்.
அடுத்து ஜிவி பிரகாஷ் இசையில் சைவம் படத்தில் இடம்பெற்ற அழகே அழகே… பாடலுக்காக இரண்டாவது தேசிய விருதினை வென்றார். தொடர்ந்து பத்தாண்டுகள் தமிழ் சினிமாவின் முதன்மை பாடலாசிரியராகத் திகழ்ந்தார் நா முத்துக்குமார். சமீபத்தில் அமெரிக்காவுக்குச் சென்றவர், அங்கு ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்கைக்கான நிதி திரட்டல் நிகழ்ச்சியில் பங்கேற்று தன் பொறுப்பை நிறைவேற்றினார்.
மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்த முத்துக்குமார், இன்று மாரடைப்பால் மரணமடைந்தார். நா முத்துக்குமாருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
முத்துக்குமாரின் தன் நலம்பேணாத் தற்கொலையால் கோபமே: கமல் ஹாஸன்
இன்று மாரடைப்பால் மரணம் அடைந்த கவிஞர் நா. முத்துக்குமார் மீது கோபமே என கமல் ஹாஸன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இரண்டு முறை தேசிய விருது வாங்கிய பாடலாசிரியரும், கவிஞருமான நா. முத்துக்குமார் இன்று மாரடைப்பால் சென்னையில் மரணம் அடைந்தார். 41 வயதில் முத்துக்குமார் மரணம் அடைந்துள்ளது திரையுலகினரை பேரதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
மரணம் அடையும் வயதா இது, அதற்குள் உங்களுக்கு என்ன அவசரம் என்று இயக்குனர் பாண்டிராஜ் உள்பட பல திரையுலக பிரபலங்கள் தங்களின் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்
இந்நிலையில் இது குறித்து கமல் ஹாஸன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, நியாயமில்லை. 41 சாகும் வயதில்லை ந.முத்துக்குமார் மிக மெதுவாய்ச் செய்த தன் நலம்பேணாத் தற்கொலையால் கோபமே. எனினுமவர் கவிக்கும் நட்பிற்கு நன்றி.
உங்களை மிஸ் பண்ணுகிறேன் என் நண்பரே. நீங்கள் விட்டுச் சென்ற வார்த்தைகளுக்காக நன்றி. நாங்கள் உங்கள் கவிதைகளை ரசிப்பதில் பாதி அளவாவது நீங்கள் வாழ்க்கையை ரசித்தீர்கள் என்று நம்புகிறேன்.
ஒரு நல்ல பாட்டு முடிந்துவிட்டதே…!- நாமுத்துக்குமார் மறைவுக்கு வைரமுத்து இரங்கல்
இலக்கியம் அறிந்த ஒரு பாடலாசிரியனைக் காலம் காவு கொண்டுவிட்டது. நா.முத்துக்குமாரின் மறைவுச் செய்தி சற்றும் எதிர்பாராதது. அவர் குடும்பத்தைப் போலவே என்னாலும் தாங்க இயலாதது. இது சாகும் வயதல்லை; சாதிக்கும் வயது. தன் பாடல்களுக்கு இரண்டு முறை தேசிய விருதுகள் பெற்றவர். அவர் பெறவேண்டிய மூன்றாவது விருதைக் காலம் களவாடிவிட்டது. கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்த் திரையுலகில் அதிகம் எழுதியவர்; அழகாகவும் எழுதியவர். “மழைமட்டுமா அழகு; வெயில் கூடத்தான் அழகு” என்று சொன்னவர், “வாழ்வு மட்டுமா அழகு; மரணம் கூடத்தான் அழகு” என்று சொல்லாமல் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
தமிழ்க் கவிஞர் உலகம் வாழையடி வாழையாய்ச் செழிக்க வேண்டும் என்று பேராசை கொண்டவன் நான். இன்று இளங்கன்று ஒன்று தன் வேர்மண்ணோடு வீழ்ந்துவிட்டதே என்று விம்மி நிற்கிறேன். ஒரு நல்ல பாட்டு முடிந்துவிட்டதே என்று வேதனைப்படுகிறேன். “உன் சொந்த ஊர் எது தம்பி,” என்று ஒருமுறை கேட்டேன். “காஞ்சி அண்ணா,” என்று சொன்னார். “அண்ணாவே காஞ்சிதான்,” என்றேன். கோவையில் நிகழ்ந்த உலகத் தமிழ் மாநாட்டில் என் தலைமையின் கவிதைபாட வந்தார். “சிறந்த வரிகளை அரங்கில் மீட்டு; நீ பிறந்த ஊர் காஞ்சி என்பதைக் காட்டு” என்று அவரை அறிமுகம் செய்தேன். இன்று மரணம் அவர் மெளனத்தையே கவிதையாக்கிவிட்டது. அவர் வாழ்ந்த பெருமையை அவர் பாடிய பாடல்கள் பாடிக்கொண்டேயிருக்கும். நா.முத்துக்குமாரை இழந்து வாடும் குடும்பத்தார்க்கும், கலை உலகத்துக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மரணத்தின் சபையில் நீதி இல்லை என்பதை மறுபடி உறுதிப்படுத்திக்கொள்கிறேன்.
நா. முத்துக்குமார் மரணம் அதிர்ச்சியும், வருத்தமும் தருகிறது.. கருணாநிதி இரங்கல்
கவிஞர் நா. முத்துக்குமாரின் மறைவு அதிர்ச்சி தருவதாக திமுக தலைவர் கருணாநிதி வேதனை தெரிவித்துள்ளார். நா. முத்துக்குமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திரைப்பட பாடல் ஆசிரியர் கவிஞர் நா.முத்துக்குமார் அவர்கள் தன்னுடைய 41 வயதிலேயே மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு மறைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் மிகுந்த வருத்தமும் அடைந்தேன்.
தமிழ்த் திரை உலகில் தன்னுடைய பாடல்களால் தனி முத்திரை பதித்த கவிஞர் முத்துக்குமார் “தங்கமீன்கள்” என்ற திரைப்படத்தில் “ஆனந்த யாழை மீட்டுகிறாய்”” என்ற பாடலுக்காகவும் “சைவம்” திரைப்படத்தில் “அழகே அழகே” என்ற பாடலுக்காகவும் தேசிய விருதுகள் பெற்ற கவிஞர். என் மீது மிகுந்த பற்றும் பாசமும் கொண்ட தம்பி நா.முத்துக்குமாரின் மறைவினால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
முத்துக்குமார் இறந்ததை நம்பவே முடியவில்லை.. ஜி.வி பிரகாஷ்; இதயமே நொறுங்கி விட்டது.. அதர்வா
பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் மரணம் திரையுலகை உலுக்கிப் போட்டுள்ளது. யாராலும் அவரது மரணத்தை நம்ப முடியவில்லை. முத்துக்குமார் இறந்து விட்டாரா என்றுதான் அத்தனை பேரும் அதிர்ச்சியுடன் உள்ளனர். நா. முத்துக்குமாரின் மரணச் செய்தி பரவிய வேகத்தில் அவரது மரணத்திற்கு இரங்கல்கள் குவிந்து வருகின்றன. திரையுலகினர் பலரும் டிவிட்டர், பேஸ்புக்கில் தங்களது சோகத்தையும், அதிர்ச்சியையும் வெளிப்படுத்தி வருகின்றனர். அவருடன் பணிபுரிந்த பலரும் அவரது மரணத்தால் பெரும் சோகமாகியுள்ளனர். அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் உள்ளனர்.
நம்ப முடியவில்லை -ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நா. முத்துக்குமாருடன் நெருக்கமாக பழகி வந்தவர். இருவரது கூட்டில் வெளியான பாடல்கள் பல சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. முத்துக்குமாரின் மறைவு குறித்து பிரகாஷ் வெளியிட்டுள்ள டிவிட்டில், என்னால் நம்ப முடியவில்லை. எனது படங்களில் மட்டும் 200 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். மிகப் பெரிய இழப்பு. அவரது குடும்பத்துக்கு கடவுள்தான் பலம் தர வேண்டும் என்று வேதனை வெளியிட்டுள்ளார்.
அதிர்ச்சியாக இருக்கிறது – நடிகர் பிரசன்னா நடிகர் பிரசன்னா வெளியிட்டுள்ள டிவிட்டில், அதிர்ச்சியாக இருக்கிறது. பெரும் சோகமாக இருக்கிறது. மிக மிக அவசரமான மரமம் இது. அவரை அத்தனை பேரும் மிஸ் செய்வோம்.
ஷாக்கிங் செய்தி இது…சரத்குமார் நடிகர் சரத்குமார் வெளியிட்டுள்ள செய்தியில் கேட்கவே அதிர்ச்சியாக இருக்கிறது. தேசிய விருது பெற்ற பாடலாசிரியர் நா. முத்துக்குமார் நம்முடன் இல்லை என்பது அதிர்ச்சி தருகிறது. ஒரு நல்ல ஆத்மாவை நாம் இழந்துள்ளோம் என்று கூறியுள்ளார் சரத்குமார்.
அதிர்ச்சி தருகிறது.. நடிகர் கணேஷ் வெங்கட்ராம் நடிகர் கணேஷ் வெங்கட்ராம் வெளியிட்டுள்ள செய்தியில், அதிர்ச்சி தருகிறது. பெரும் வேதனையாக உள்ளது. அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
உங்களை மிஸ் பண்ணுவோம்… நடிகர் சதீஷ் நடிகர் சதீஷ் வெளியிட்டுள்ள டிவிட்டில், நா. முத்துக்குமார் சாரின் மரணச் செய்தி பெரும் அதிர்ச்சி தருகிறது. அவரது குடும்பத்துக்கு எனது இரங்கல்கள். அவரை அனைவரும் மிஸ் செய்வோம் என்று கூறியுள்ளார்.
நம்பவே முடியவில்லை.. நடிகர் சித்தார்த் நடிகர் சித்தார்த் வெளியிட்டுள்ள டிவிட்டில், என்னால் நம்பவே முடியவில்லை. சாகும் வயதா இது. கடவுல் அவரது குடும்பத்துக்குப் பலம் தரட்டும். மிகப் பெரிய இழப்பு. மிக மிக சோகமான நாள் இன்று என்று வேதனையை வெளியிட்டுள்ளார்.
மிகப் பெரிய இழப்பு… பாடகி சின்மயி பாடகி சின்மயி வெளியிட்டுள்ள செய்தியில், திரைத்துறைக்கு மிகப் பெரிய மிக மோசமான இழப்பாகும் இது. மிக மிக துரிதமான மரணம் என்று வேதனை தெரிவித்துள்ளார்.
மிகப் பெரிய இழப்பு..ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தியில், திரைத்துறைக்கு இன்னொரு மிகப் பெரிய இழப்பு. அவரது மரணச் செய்தி அதிர்ச்சி தருகிறது. என்ன ஒரு திறமையான பாடலாசிரியர் என்று கூறியுள்ளார்.
இதயம் உடைந்து சிதறியது போல உள்ளது… நடிகர் அதர்வா நடிகர் அதர்வா வெளியிட்டுள்ள செய்தியில், இதயமே சுக்கு நூறாக நொறுங்குவது போல உள்ளது. நா. முத்துக்குமார் சாரின் மரணத்தை நம்ப முடியவில்லை. அவரது ஆத்மா சாந்தி அடையட்டும். அவரது குடும்பத்துக்கு அனைத்துப் பலமும் கிடைக்கட்டும் என்று கூறியுள்ளார் அதர்வா.
அத்தனை பேரையும் அழ வைத்து விட்டுப் போய் விட்டாயே முத்துக்குமார்!
மரணம் இயற்கைதான்… ஆனால் முத்துக்குமாரின் மரணத்தை மனம் ஏற்க முடியவில்லை. அழுது புலம்புகிறது. எத்தனையோ இழப்புகளை சந்தித்து விட்ட போதிலும் முத்துக்குமார் இல்லை என்ற செய்தி மனதை அழுத்திப் பிசைகிறது. செய்தி கேள்விப்பட்ட ஒவ்வொருவரையும் அழ வைத்து விட்டார் முத்துக்குமார். அத்தனை பேரும் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். மொத்தமாக அத்தனை பேரையும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது முத்துக்குமாரின் மரணம். அத்தனை பேரின் செல்லப் பிள்ளையாக வலம் வந்தவர் முத்துக்குமார். இவரது எழுத்துகளுக்கு எல்லாத் தரப்பிலும் ரசிகர்கள். வயது வித்தியாசம் இல்லாமல் ரசித்து மகிழ வைத்தது இவரது எழுத்துக்கள்.
எல்லோருக்கும் செல்லப்பிள்ளை எல்லோரிடமும் சிரித்த முகம். கேட்கும் பாடலை உடனே தருவது. வார்த்தைகளில் ஜாலம் காட்டாமல் உயிர்ப்போடு ஒவ்வொரு வரியையும் எழுதுவது.
சமூகத்திற்காகவும் குரல் கொடுத்த பெரிய மனிதன் சம்பாத்தியத்துக்காக மட்டுமல்லாமல், சமூக அவலங்களுக்காகவும் தனது தமிழ் மூலம் குரல் கொடுப்பது.. நிச்சயம் முத்துக்குமார் மிகப் பெரிய மனிதன்.
தந்தை – மகளின் தேசிய கீதம் ஒவ்வொரு தந்தை – மகளுக்கும், தேசிய கீதமாகவே மாறிப் போய் விட்டது, இவருக்கு முதல் தேசிய விருதை வாங்கி கொடுத்த ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடல்.
மீள முடியாத சோகம் சைவம் படத்தில் 2வது முறையாக இவர் விருது வாங்கியபோது ஒவ்வொரு தமிழ் நெஞ்சமும் மகிழ்ந்து களித்தது. எதைச் சொல்வது, எப்படிச் சொல்வது என்றே தெரியவில்லை.
மீள முடியாத சோகம் சைவம் படத்தில் 2வது முறையாக இவர் விருது வாங்கியபோது ஒவ்வொரு தமிழ் நெஞ்சமும் மகிழ்ந்து களித்தது. எதைச் சொல்வது, எப்படிச் சொல்வது என்றே தெரியவில்லை.
அநியாயமான மரணம் உடல் நிலையை சரியாக பார்த்துக் கொள்ளாமல் இப்படி எல்லோரையும் பரிதவிக்க விட்டு போய் விட்டார் முத்துக்குமார். திரையுலகுக்கு பேரிழப்பு என்று வெறுமனே சொல்லி விட முடியாது. ஒட்டுமொத்த தமிழுக்கும் இவரது மரணம் மிகப் பெரிய இழப்பு.. காரணம், முத்துக்குமார் நல்ல கவிஞர் மட்டுமல்ல, நல்ல மனிதரும் கூட. நிச்சயம் அநியாயமான மரணம்… !
போய் வா என் தம்பி.. தமிழ் உள்ளவரை நீ இருப்பாய்.. நா. முத்துக்குமாருக்கு சீமான் கண்ணீர் அஞ்சலி
பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் மரணத்திற்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இரங்கலும், வேதனையும் தெரிவித்துள்ளார். தமிழ் உள்ளவரை, மொழி உள்ளவரை முத்துக்குமாரும் நிலைத்திருப்பார் என்று அவர் புகழாரம் சூட்டியுள்ளார் சீமான். சீமான் இயக்கிய வீர நடை படம் மூலமாகத்தான் பாடலாசிரியராக தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் நா. முத்துக்குமார். அன்று தொடங்கிய அவரது பாட்டு வரிசை நிற்காமல் தொய்வில்லாமல் தமிழ் நெஞ்சங்களை தாலாட்டி வந்தது. இன்று நின்று போய் விட்டது. முத்துக்குமார் மறைவுக்கு சீமான் இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
என் ஆருயிர்த் தம்பி எனது ஆருயிர் தம்பியும் புகழ்பெற்ற திரைப்பட பாடலாசிரியருமான நா.முத்துக்குமார் மறைவுற்ற செய்திகேட்டு ஆழ்ந்த மனத் துயரில் சிக்கித் தவிக்கிறேன். என் தம்பி முத்துக்குமார் தமிழ்த் தேசிய இனத்தின் மாபெரும் இளங்கவி. ஏறத்தாழ 1,500க்கு மேல் எழுதி திரைப்பட பாடல்களை தன் அழகு தமிழால் உயிர்ப்பிக்கச் செய்த மாபெரும் திறமையாளன்.
கவிஞன் மட்டுமல்ல, மிகச் சிறந்த தமிழுணர்வாளன் என் தம்பி நா.முத்துக்குமார் அவர்களின் ஆழ்ந்த மொழி நுட்புலமும், சிறந்த சொல்லாட்சி முறைமைகளும் அரிதிலும், அரிதானவை. அழகு தமிழை அள்ளி எடுத்து இசைமொழியில் அதனைப் பொருத்தும் அவனது திறமையைக் கண்டு நான் வியந்து போயிருக்கிறேன். அந்த வியப்புதான் என் தம்பி முத்துக்குமாரை நான் இயக்கிய ‘வீரநடை’ திரைப்படத்தின் பாடலாசிரியராக அறிமுகம் செய்யத்தூண்டியது. வெறும் கவிஞனாக மட்டுமில்லாமல் மிகச்சிறந்த தமிழுணர்வாளனாக தன் இனத்திற்கு நேருகின்ற அநீதிகளைக் கண்டு தன் வார்த்தை சவுக்கினை எடுத்து விளாசுகிற கலகக்காரனாக என் தம்பி முத்துக்குமார் திகழ்ந்தான்.
தமிழனை தலைநிமிரச் செய்த என் தம்பி அரசியல் களத்தில் நான் முன்னெடுத்த எல்லா முயற்சிகளிலும், அவனது வாழ்த்து அழகு தமிழ் கவிதையாய் வந்துகொண்டே இருந்தது. தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளைப் பெற்று தமிழனின் திறமையை தலைநிமிரச் செய்த என் தம்பி இன்று மறைந்துபோனது தனிப்பட்ட அளவில், வாழ்நாளில் நான் அடைந்திருக்கிற பெருந்துயர். வார்த்தைகளால் விவரிக்க முடியாத மாபெரும் இழப்பொன்றை தமிழ்த்தேசிய இனத்தின் படைப்புலகம் இன்று அடைந்திருக்கிறது.
புகழ் வணக்கம் என் தம்பி நா.முத்துக்குமார் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினரில் ஒருவனாக நின்று துயரில் நானும் பங்கேற்கிறேன். விழிகள் முழுக்க நிரம்பி ததும்பும் கண்ணீர்தாரைகளால் என் தம்பி நா.முத்துக்குமார் அவர்களுக்கு புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
என்றென்றும் என் தம்பியின் நினைவுகளுடன் என்றென்றும் என் தம்பி நா.முத்துக்குமார் அவர்களின் நினைவுகளோடும், அவன் ஆழ்மனதில் கிளர்ந்து கொண்டிருந்த தமிழின விடுதலை என்கிற கனவுகளோடும், அவன் அண்ணனாகிய நிச்சயம் பயணிப்பேன் என அவனிடத்தில் நான் உறுதிகூறுகிறேன்
போய் வா தம்பி போய் வா என் தம்பி! இம் மொழியுள்ளவரை உன் கவி இருக்கும். தமிழ் உள்ளவரை நீயிருப்பாய் என்று தனது அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.
குளோபல் தமிழ்