அமெரிக்காவில் கடும் பனிப்புயல்: 1400 விமான சேவைகள் ரத்து!
அமெரிக்காவில் சில மாநிலங்களில் நிலவும் கடும் பனிப்புயலால் 70 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு 1400 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நெப்ராஸ்கா, அயோவா, கொலராடோ ஆகிய மாநிலங்களில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்புயலால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
மணிக்கு 50 தொடக்கம் 70 மைல் வரை பனிப்புயல் வீசுவதாகவும் சுமார் 6 இஞ்சு உயரம் வரை பனி நிரம்பியுள்ளதாலும் அங்கு வாழும் மக்களின் இயல்பு நிலை பாதிப்படைந்துள்ளது.
பனிப்புயல் காரணமாக மேற்கண்ட 3 மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களில் கடும் பனி கொட்டுகிறது. விமான நிலையத்தில் ஓடு தளங்கள் அனைத்தும் பனியால் மூடிக்கிடக்கின்றன. இதன் காரணமாகவே அங்கு சேவையில் உள்ள 1400 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொலராடோ மாநிலத்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அங்கு தேசிய பாதுகாப்பு படைகளின் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.
நெப்ராஸ்காவில் இன்று இரவு பனிப்புயல் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அங்கும் தேசிய பாதுகாப்பு படையினர் ஆயத்தமான நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
பனிப்புயல் தாக்கம் உள்ள கொலராடோ, நெப்ராஸ்கா ஆகிய மாநிலங்களில் ஆபத்தான பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கொலராடோவில் மணிக்கு 90 மைல் வேகத்தில் பனிப்புயல் வீசுகிறது. இதனால் அங்கு லட்சக்கணக்கான வீடுகளில் மின் தடை ஏற்பட்டுள்ளது.
வயூமிங் நகரில் உள்ள பாடசாலைகள் , வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.