உரிமைக்காக குரல் கொடுக்க ஓரணியில் திரண்டு எழுக தமிழ் பேரணியை வெற்றி பெறச்செய்வோம் என்று முன்னாள் நடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணித் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ் மக்கள் பேரவை நடாத்தும் ‘எழுக தமிழ்’ பேரணி தொடர்பாக, அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை
எதிர்வரும் 24 ஆம் திகதி தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் நாள் எனக் குறிப்பிட்ட அவர், இந்தப் பேரணியில் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் கலந்துகொண்டு, எமது உரிமைகளை நிலைநாட்டுவதற்கு குரல் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச சமூகமாக இருந்தால் என்ன, வளர்ச்சியடைந்த நாடுகளாக இருந்தால் என்ன, அவை அனைத்தும் தனது நலன்களை முதன்மைப்படுத்தி நாடுகளுக்கிடையிலான உறவுகளையே பேணும்.
அந்த வகையில் அவை அரசாங்கத்துடன் மட்டுமே இணைந்து செயற்படும். பாதிக்கப்பட்ட மக்களின் குரல் ஓங்கி ஒலிக்கும்போது மட்டுமே அவை அவற்றின் மீதும் கரிசனை செலுத்தும்.
1977 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் கூட்டணிக்கு அளித்த வலிமைமிக்க ஆணை தான் முதன் முதலில் சர்வதேச சமூகம் எம்மீது கவனத்தைச் செலுத்துவதற்கு வழிவகுத்தது.
அப்போது ஆட்சி அமைத்த ஜே.ஆர் மேற்குலக நாடுகளின் துணையுடன் எம்மீது திட்டமிட்ட அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டது வேறுவிடயம்.
2009 ஆம் ஆண்டு பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் ஆயதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டது.
அதன் பின்னர் மகிந்த ராஜபக்ச எம்மை அரசியல் ரீதியாகவும் தொடர்ந்து அடிமையாக வைப்பதற்கான நிகழ்ச்சி நிரலைத் தொகுத்து அதனை நடைமுறைப்படுத்தி வந்தார்.
சர்வதேசத்தின் காய் நகர்த்தல்கள் அந்த திசை வழியிலேயே செல்கின்றன. உலகில் சமாதானத்தையும் தோற்றுவிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஐ.நா சபையும் வல்லரசுகளின் பிடியில் சிக்கி அவர்களின் தாளத்திற்கு ஏற்ப ஆடும் நிலையில் உள்ளது.
இத்தகைய நெருக்கடிகளுக்கு இடையிலேயே நாம் எமக்கான உரிமைகளைப் பெறவேண்டியுள்ளது. எனவே நாம் வீதியில் இறங்கி குரல்கொடுத்தால் மட்டுமே எமது உரிமைகளை வென்றெடுக்க முடியும்.
இறுதியாக நடைபெற்ற யுத்தத்தின் பேரால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிர்களுக்கு நீதி வேண்டியும் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமைமீற்லகளில் ஈடுபட்டவர்களுக்கும் எதிராக சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும்
இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பிலிருக்கும் எமது காணிகளை மீட்பதற்கும், தமிழ் மக்களின் தாயகமான வடக்கு – கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட சிங்கள பௌத்தமயமாக்கலைத் தடுத்து நிறுத்துவதற்கும் இதுவரை காலமும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு இடங்களில் படையினராலும் பாதுகாப்புத் தரப்பினராலும் புலனாய்வுப் பிரிவினராலும் கடத்திச் செல்லப்பட்டும்
கைது செய்யப்பட்டும் காணாமல் போகச்செய்யப்பட்டவர்கள் மற்றும் இறுதியாக நடைபெற்ற யுத்தத்தின் போது படையினரிடம் சரணடைந்து காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பான உண்மையைக் கண்டறிவதற்கு வலியுறுத்தியும்,
என்ன காரணத்திற்காக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றோம் என்பதே தெரியாமலும் அரசியல் காரணங்களுக்காகவே தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரியும்,
யுத்தத்தினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மீனவர்கள் தென்னிலங்கை மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடியாலும்இ இந்திய மீனவர்களாலும் மேலும் மேலம் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.
தமிழ் மீனவர்களின் பாடுகள் சிங்கள மீனவர்களினால் ஆக்கிரமிக்கப்படுகின்றது. சொந்த மண்ணிலும் சொந்தக் கடலிலும் அவர்கள் தொழில் செய்யும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது.
ஆகவே மறுக்கப்பட்ட மீனவ சமுதாயத்தின் உரிமையை மீளப்பெறுவதை வலியுறுத்தியும், தமிழரின் வாழ்விடங்களில் காணிஅபகரிப்பின் சின்னமாக புத்தர் சிலைகளை நிறுவுவதைக் கைவிடுமாறு கோரியும்
தமிழ் மக்கள் பேரவை ஏற்பாடு செய்துள்ள ‘எழுக தமிழ்’ பேரணியில் கலந்துகொண்டு குரல் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு தமிழ் பேசும் மக்களதும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், அமைப்பினர், தர்மத்தை நிலைநாட்ட விரும்புவோர், உண்மையான ஜனநாயகத்தை விரும்புவோர், தமிழ் தேசிய இனத்தின் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று விரும்பும் அனைத்து முற்போக்கு சக்திகள் ஆகியோரின் கடமையாகும்.
தமிழ்பேசும் மக்களின் பொது அமைப்புகள், வடக்கு-கிழக்கு மாகாணத்தில் இயங்குகின்ற பொது அமைப்புகள், தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழக சமூகத்தினர், கல்விச் சமூகத்தினர், இளைஞர் மன்றங்கள், பெண்கள் அமைப்புகள், அரச மற்றும் அரசசார்பற்ற ஊழியர்கள், எல்லாவற்றிற்கும் மேலாக இவை எதிலும் பங்குபற்றாத பொதுமக்கள் அனைவரும் இதில் பங்குகொண்டு எமது உரிமைக்கு குரல் கொடுக்க முன்வரவேண்டும்.
வடக்கு-கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் அனைத்து பகுதியிலிருந்தும் தமிழ் மக்கள் தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்று விரும்புகின்ற அனைவரும் இப்பேரணியில் கலந்துகொள்ளவேண்டும். மொத்தத்தில் நமது நாட்டில் உள்ள அனைத்து மதங்களினதும் வழிபாட்டுத் தலங்களிலும் நடைபெறுகின்ற திருவிழாக்கள் அனைத்தும் ஒரே நாளில் ஒரே இடத்தில் நடைபெற்றால் எப்படியிருக்குமோ அந்தளவிற்கு மக்கள் இதில் கலந்துகொள்ள வேண்டும்.
யாரோ வந்து எம்மை அழைத்துச் செல்வார்கள் என்று காத்திராமல், மேற்கண்ட விடயத்திற்காக எப்படி நாம் குடும்பத்துடன் அணி அணியாக செல்வோமோ அவ்வாறு கலந்துகொள்ள வேண்டும். இதுவே நாம் இப்பொழுது செய்யக்கூடிய அதிகபட்சபணி.
எமது வருங்கால சந்ததி தலைநிமிர்ந்து வாழ எம்மால் முடிந்ததைச் செய்வோம் வாருங்கள். இதுவரை காலமும் யாராவது எம்மை விடுவிப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்தோம்.
இப்பொழுது அவை அனைத்தும் கைநழுவி போகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், எமக்காக நாம் குரல் கொடுக்கும் ஒரு சூழல் எம்மால் உருவாகியுள்ளது. இதனைச் சிக்கெனப் பிடித்து எமது வரலாற்றுக் கடமையைச் செய்து முடிப்போம்.
நாம் சுயகட்டுப்பாடு மிக்கவர்கள் என்பதை இந்நாட்டின் ஆட்சியாளர்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் எடுத்துக்காட்டும் வகையில், எத்தகைய சட்டம் -ஒழுங்கு பிரச்சினைக்கும் இடம் கொடுத்துவிடாமல், எமது பண்பாட்டு விழுமியங்களுக்கு மதிப்பளித்து எமது கொள்கையில் உறுதியுடன் எமது கோரிக்கையின் நியாயத்தை வெளிப்படுத்தி பேரணியில் கலந்துகொள்வோம். இந்தப் பேரணி எமக்காக நாம் உணர்வுடன் நடத்தும் பேரணி.
அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எமது ஒழுக்கத்தை நிரூபிப்போம். உணர்வோடு வாருங்கள்! ஒழுக்கமாக நடந்துகொள்ளுங்கள்!! வெற்றிபெறுவோம் என்று நம்பிக்கை வையுங்கள். எதிர்காலம் நமதென்று உறுதிகொள்ளுங்கள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.