தமிழர்கள் என்றால் புலி முத்திரை குத்துகின்றார்கள்!
தமிழர் ஒருவர் ஊடக நிறுவனத்தின் தலைவராக காணப்படும் பட்சத்தில் அந்நிறுவனத்திற்கு புலி முத்திரை குத்தப்படுவதாக பிரதியமைச்சர் புத்திக பத்திரன சாடியுள்ளார்.
அத்துடன், ஊடக நிறுவனங்களை பெரும்பான்மை இனத்தவர்கள் மாத்திரமா கொண்டு நடத்த வேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வினவியுள்ளார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
”பிராந்திய ஊடகவியலாளர்களை பலப்படுத்துவதற்கு மானிய கடன் திட்டங்கள் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன.
இம்முறை அவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத நிலையில், அவர்களுக்கான காப்புறுதி போன்ற பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேவேளை, கடதாசிக்கான வரி அதிகரிப்பினால் நாளிதழ்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளன. எனவே இது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும்.
அதுமாத்திரமின்றி ஊடகவியலாளர்களுக்கு வீடு, தொலைப்பேசி மற்றும் அதிவேக இணைய வசதிகளை பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களாக தமிழர்கள் காணப்படும் பட்சத்தில் அந்த ஊடக நிறுவனங்களுக்கு புலி முத்திரை குத்தப்படுகிறது. ஏன் சிங்களவர்கள் மாத்திரமா ஊடக நிறுவனங்களை கொண்டு நடத்த வேண்டும்.
எதிர்காலத்தில் முஸ்லிம் இனத்தவர் ஒருவர் ஊடக நிறுவனத்திற்கு உரிமையாளரானால் அந்நிறுவனத்திற்கு ஐ.எஸ். முத்திரை குத்தப்படும்” எனத் தெரிவித்தார்.