வரலாற்றில் முதன் முறையாக இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி இடை நிறுத்தப்பட்டது!
செயற்கை மழை பெய்வதற்கான Rainfall Mission வேலைத்திட்டத்தினை இலங்கை மின்சார சபை நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை விமானப்படையின் Y12 விமானத்தை பயன்படுத்தி செயற்கை மழைக்கான இரசாயன பதார்த்தம் தூவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அது வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதுடன், 25 நிமிடங்களுக்கு மழை பெய்ததாகவும் அறிவித்திருந்தனர்.
மவுஸ்ஸாகலை நீர்த்தேக்க பிரதேசங்களில் செயற்கை மழையின் பெய்ய வைப்பதற்காக வான் பரப்பில் இரசாயன பதார்த்தம் தூவப்பட்டது. இலங்கை மின்சார சபையின் வேண்டுகோளுக்கு இணங்க தாய்லாந்து நிறுவனமொன்றினால் இந்த திட்டம் செயற்படுத்தப்பட்டது.
இந்த திட்டம் , காசல்ரீ மற்றும் மவஸ்ஸாகலை நீர்த்தேக்க பிரதேசங்களில் எதிர்வரும் தினங்களிலும் முன்னெடுக்கப்படும் என மின்சார சபை தெரிவித்திருந்தது. எனினும், அத்திட்டத்தினை மின்சார சபை திடீரென நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
குறித்த பகுதிகளில் காணப்படும் மேகக் கூட்டங்களில் போதியளவான ஈரப்பதம் இல்லாத காரணத்தினால் இத்திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளதாக மின்சார சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரப்பதனுடனான மேகக் கூட்டங்களை கொண்ட பகுதிகளில் ஆராய்ந்து இத்திட்டம் அப்பகுதிகளில் மேற்கொள்வதற்காக ஆராய்ந்துவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் ஏற்பட்டிருக்கும் வரட்சி காரணமாக நீர்த் தேக்கங்கள் வற்றிப் போயுள்ளன. இந்நிலையில், மின்சாரத்தினை பெறுவதில் பெரும் இடர்களைச் சந்தித்துவருகின்றது இலங்கை.
இந்த நெருக்கடியான நேரத்தில் செயற்கை மழை பெய்வதற்கான திட்டம் பெரும் வாய்ப்பாக அமையும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டு அது பரீட்சார்த்தமாக செய்து பார்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.