காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கிளிநொச்சியில் கவனஈர்ப்பு

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கிளிநொச்சியில் கவனஈர்ப்பு

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இன்று கிளிநொச்சியில் கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் முன்பாக ஏ9 வீதியில் இடம்பெற்றது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை தேடி கிளிநொச்சியில் 769 நாட்களாக சுழற்சி முறையிலான போராட்டத்தினை முன்னெடுத்து வரும் நிலையில் மாதம் தோறும் 30ம் திகதியும் கவனஈர்ப்ப போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த போராட்டத்தின்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் (சுமார் 25 பேர்) தமது உறவுகளின் புகைப்படங்களை தாங்கியவாறு அமைதியாக போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தனர்.

ஓஎம்பி அலுவலகம் தேவை இல்லை என நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம். இதற்காக நாம் ஜெனிவாவிலும் இவ்விடயத்தினை வலியுறுத்தி வருகின்றோம்.

எமது பிரச்சினை தொடர்பில் எமது அரசியல் பிரதிநிதிகளே அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றனர். அவ்வாறு செயற்பட்டுவிட்டு சிறிய ஆயுதத்தினை வதை்துதான் சாதிக்க முடியும் என சுமந்திரன் அவர்கள் எமக்க தெரிவிக்கின்றார்.

இதுவரை காலமும் அந்த சிறிய ஆயுதத்தை வைத்து இவர்களால் என்னத்தை செய்ய முடிந்தது என குறிப்பிட்டனர். பல சந்தர்ப்பங்கள் வந்தபோது இவர்கள் எதையும் செய்யவில்லை. தேர்தலை இலக்குவைத்தே இவர்கள் தற்போது செயற்படுகின்றனர் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

கிளிநொச்சியில் பா.ம உறுப்பினர் சிறிதரன் அவர்களின் அலுவலகத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் வந்தபோது அவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு பிள்ளையை விடுதலை செய்யுமாறு நான் கேட்டேன்.

இன்றுவரை எமக்கு எவ்வித தீர்வுகளும் வழங்கப்படவில்லை என தாயார் ஒருவர் தெரிவித்தார். எமது பிள்ளைகள் காணாமல் போகவில்லை.

நாம் எமது பிள்ளைகளை ஒப்படைத்தோம். எமது பிள்ளைகளை விடுதலை செய்யுங்கள் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தனர்.

Copyright © 4531 Mukadu · All rights reserved · designed by Speed IT net