எதிர்வரும் வாரம் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்!
எதிர்வரும் வாரம் அதிகூடிய வெப்பநிலை நிலவும் என்று எதிர்பார்ப்படுவதால், பொதுமக்களை முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் ஏப்ரல் 5ஆம் திகதி முதல் 15ஆம் திகதிவரையான காலப்பகுதியில் இலங்கையில் சூரியன் உச்சம் கொடுக்கும் என்பதால், இக்காலப்பகுதயில் பகல் மற்றும் இரவுவேளைகளில் அதிகூடிய வெப்பநிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
எனவே, தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.
தென் மாகாணத்தில் திக்வெல்ல, கக்கணதுர, கொட்டவில ஆகிய பகுதிகளில் எதிர்வரும் 5ஆம் திகதி சூரியன் உச்சம் கொடுக்கும் என்பதோடு, வட மாகாணத்தில் எதிர்வரும் 15ஆம் திகதி சூரியன் உச்சம் கொடுக்கும்.
மேலும், அதிகூடிய வெப்பநிலை குருநாகல் மாவட்டத்தில் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
குருநாகல் மாவட்டத்தில் சாதாரணமாக நிலவும் 32பாகை செல்சியஸ் வெப்பநிலை, தற்போது 38.8பாகை செல்சியசாக அதிகரித்துக் காணப்படுகின்றது எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.
இவ்வெப்பமான காலப்பகுதியில் தண்ணீரை அதிகளவில் அருந்தி தங்களைப் பாதுகாக்குமாறும் பொதுமக்களிடம் சுகாதாரப் பிரிவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் வட மேல் மாகாணம் மற்றும் அம்பாறை, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, மொனராகலை, அம்பாந்தோட்டை, கம்பஹா மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில் வெப்பநிலை சுட்டி எனப்படும் உடல் வெப்பநிலை பாரிய அளவில் அதிகரிக்கலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.