பகிடிவதையை பொறுத்துக்கொள்ள முடியாமல் கடிதம் எழுதிவிட்டு, உயிரை மாய்த்துக்கொண்ட மாணவன்..!
மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் ஹோமாகம – தியகம தொழில்நுட்ப பிரிவில் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் எல்லை மீறிய பகிடிவதையை பொறுத்துக்கொள்ள முடியாமல் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
நேற்றுப் பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் குருநாகல் – கும்புக்கெட்டே – சடுவாவ பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஷனில்க தில்ஷான் விஜேசிங்க என்ற மாணவனே மேற்படி மரணித்துள்ளார்.
இரண்டு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின் முதலாவது பிள்ளையான இவர், தியகம தொழில்நுட்பக் கல்லூரியில் இடம்பெறும் பகிடிவதை தொடர்பில், தனது மரணத்திற்கு முன்னர் கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், உயிரிழந்த மாணவன், பகிடிவதைக்குள்ளானதன் பின்னர் ஏற்பட்ட உளவியல் தாக்கத்திற்கு குருநாகலிலுள்ள மனநல வைத்தியர் ஒருவரிடம் சிகிச்சை பெற்றுள்ளதாக கும்புக்கெட்டே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், உயிரிழந்த மாணவனின் பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.