இலங்கையில் பொருளாதாரத்தில் ஏற்பட்ட வளர்ச்சி.
இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்து வருவதாகவும் இலங்கை பங்குச் சந்தையிலும் பங்குகளின் வளர்ச்சி அதிகரித்துள்ளதாகவும் வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
தமிழ், சிங்கள புத்தாண்டு நெருங்கி வரும் வேளை அமெரிக்க டொலருக்கு ஈடான இலங்கை ரூபாயின் பெறுமதி 2.1 வீதத்தினால் அதிகரித்துள்ளது.
கடந்த புதன் கிழமை அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 174 ரூபாய் 60 சதமாக காணப்பட்டது.
அத்துடன் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அரச காப்பீடு பத்திரங்கள் மற்றும் பிணை முறிகளில் ஒரு பில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளனர். முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கி விட்டு, நாடாளுமன்றத்தை கலைத்ததால், நாட்டில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது.
எனினும் ரணில் விக்ரமசிங்க நீக்கப்பட்டமை மற்றும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
எனினும் அரசியல் நெருக்கடி நிலை காணப்பட்ட 51 நாட்களில் அரச காப்பீடு பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டிருந்த வெளிநாட்டு நிதி திரும்ப பெறப்பட்டது. இலங்கை ரூபாயின் வீழ்ச்சி 16 வீதமாக அதிகரித்தது.
இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 27 ஆம் திகதி வரையான மூன்று மாத காலப்பகுதியில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 1.6 பில்லியன் ரூபாயை அரச காப்பீடு பத்திரங்களில் முதலீடு செய்துள்ளனர்.
மொத்தமாக 3.3 பில்லியன் ரூபாய் வெளிநாட்டு முதலீடுகள் கிடைத்துள்ள இலங்கை மத்திய வங்கியின் புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.