இன்று நண்பகல் 12.11 மணிக்கு சூரியன் உச்சம் கொடுக்கும்!

இன்று நண்பகல் 12.11 மணிக்கு சூரியன் உச்சம் கொடுக்கும்!

சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இது பின்னர் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கும் பரவக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றைய வானிலை தொடர்பில் அந்த திணைக்ளம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்

சூரியனின் வடதிசை நோக்கிய தொடர்பான இயக்கத்தின் காரணமாக இவ்வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

அந்த வகையில் இன்று நல்லுருவ, பெல்லப்பிட்டிய, போத்தலே, கஹவத்தை, கதுருகல்ல, கொங்கெட்டிய, ஹபெஸ்ஸ மற்றும் தொம்பகஹவெல ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.11 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.”

எனவே, தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை எடுக்குமாறும், வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இக்காலப்பகுதியில் தண்ணீரை அதிகளவில் அருந்தி தங்களைப் பாதுகாக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Copyright © 6587 Mukadu · All rights reserved · designed by Speed IT net