தமிழ் தொழிலதிபர் ஒருவருக்கு வெளிநாட்டில் 30 ஆண்டு சிறை தண்டனை!
இலங்கையை சேர்ந்த தமிழ் தொழிலதிபர் ஒருவருக்கு சென்னையில் உள்ள போதைப்பொருள் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் 30 ஆண்டு கால சிறைத்தண்டனை விதித்துள்ளது.
அத்துடன், அவருக்கு 3 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
“சென்னை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த 2002ம் ஆண்டு 48 கிலோ போதைப்பொருள் வைத்திருந்ததாக 6 பேரை கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் ராஜஸ்தானை சேர்ந்த ரோஷ்கான் மற்றும் இலங்கையை சேர்ந்த அசோக் குமார் ஆகியோர் தலைமறைவாகியிருந்தனர். இதையடுத்து இந்த வழக்கு இரண்டாக பிரிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
அதில், முதலில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கு மட்டும் 11 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதையடுத்து தனியாக பிரிக்கப்பட்ட வழக்கில் ரோஷ்கான் மற்றும் அசோக் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்தநிலையில் கடந்த 2009ம் ஆண்டு அசோக் குமார் சென்னை திருவான்மியூரில் உள்ள வங்கி லாக்கரில் போதைப்பொருள் வைத்திருப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, வங்கி அதிகாரிகளின் உதவியுடன், பொலிஸார் அசோக் குமாரின் வங்கி லாக்கரை சோதனை செய்தனர். அதில் 1.140 கிலோ ஹெராயின் போதைப்பொருள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அத்துடன், குறித்த லாக்கரில் இருந்து 7 ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
இதனை தொடர்ந்து 48 கிலோ ஹெராயின் வைத்திருந்த வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் அசோக்கை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், சிறை காவலர்களிடம் அனுமதி பெற்று விசாரணை நடத்தினர்.
அதில், அசோக் குமார் தனது லாக்கரில் ஹெராயின் வைத்திருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து தனியாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு சென்னையில் உள்ள போதைப்பொருள் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இதன்போது அரச தரப்பு சட்டத்தரணி குமார் ஆஜராகி வாதிட்டார். பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி ஐயப்பன், இந்த வழக்கில் அசோக் குமார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், 30 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.