6 மாதங்களுக்கு தனியாரிடம் 100MW கொள்வனவு!

6 மாதங்களுக்கு தனியாரிடம் 100MW கொள்வனவு!

இடையற்ற மின்சாரத்தை வழங்கும் பொருட்டு 100 மெகா வாற் (100MW) மின்சாரத்தை தனியாரிடமிருந்து கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை இதற்கு முன்னர் அனுமதி வழங்கியிருந்தது.

குறித்த மின்சார கொள்வனவை 6 மாதங்களுக்கு பெற்றுக் கொள்வதற்காக, நேற்று (09) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போதே மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையான கொள்முதல் குழுவின் (Standing Procurement Committee) பரிந்துரைக்கு அமைய, கிலோ வாற் ஒன்று ரூபா 30.20 வீதம் பல்லேகல கிறீட் உப மின்நிலையத்திற்கு 24MW மின்சாரத்தையும், காலி  கிறீட் உப மின்நிலையத்திற்கு 10MW மின்சாரத்தையும் கொள்வனவு செய்ய ஐக்கிய இராச்சியத்தின் Aggreko International Project Ltd நிறுவனத்திடம் ஒப்பந்தம் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அத்துடன், குறித்த குழுவின் பரிந்துரைக்கு அமைய, கிலோ வாற் ஒன்று ரூபா 30.58 வீதம் மஹியங்கண கிறீட் உப மின் நிலையத்திற்கு 10MW மின்சாரத்தையும், பொலன்னறுவை கிறீட் உப மின் நிலையத்திற்கு 8MW மின்சாரத்தை ரூபா 30.63 இற்கும் வழங்குவதற்கான ஒப்பந்தத்தை ஐக்கிய அரபு இராச்சியத்தின் Altaawa Alterrative Solutio Global FZE நிறுவனத்திற்கும்  வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அம்பாந்தோட்டை கிறீட் உப மின்நிலையத்திற்கு 24MW மின்சாரத்தை கிலோ வாற் ஒன்று ரூபா 28.43 வீதமும், ஹொரண கிறீட் உப மின் நிலையத்திற்கு 24MW மின்சாரத்தை கிலோ வாற் ஒன்று 28.70 வீதமும் வழங்குவதற்கான ஒப்பந்தத்தை ஹொங்கொங்கின் V Power Holdings Ltd நிறுவனத்திடம் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதேவேளை தற்பொழுது ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையிலும், தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்குமாக, குறுகியகால இடைக் கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐவர் கொண்ட அமைச்சரவை உப குழு ஒன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த குழுவில், நிதியமைச்சர்; மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர்; போக்குவரத்து மற்றும் வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர்; துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட குறித்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Copyright © 8811 Mukadu · All rights reserved · designed by Speed IT net