உடலுக்கு குளிர்ச்சியும், புத்துணர்வும் தரும் இயற்கை குளிர்பானங்கள்.
கோடைகாலத்தில் அனைவருக்கும் அதிக தாகம், நாவறட்சி மற்றும் நீர்ச்சத்து குறைபாடு போன்றவை ஏற்படும்.
அதன் காரணமாக அனைவரும் நீர் சார்ந்த பானங்கள், ஆகாரங்களை அதிகளவு உட்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
தண்ணீரை அதிகளவு குடிக்க வேண்டி இருந்தாலும் குறிப்பிட்ட அளவிற்கு மேல் தண்ணீரை குடிக்க அனைவருக்கும் பிடிக்காது.
அதனால்தான் பெரும்பாலான சுவைமிகு குளிர் பானங்கள், பழரசங்கள், சர்பத் போன்றவைகளை குடித்து உடலையும், உள்ளத்தையும் குளுமைப்படுத்தி கொள்கின்றனர்.
எண்ணற்ற பழரசங்களும், குளிர்பானங்ளும் பாட்டிலும், பெட்டியிலும் அடைத்து வைத்து கொடுக்கப்பட்டாலும் அவை அனைத்தும் ஏதேனும் ஓர் இரசாயன கலவை கலந்தே காணப்படும்.
எனவே கோடைகாலத்தில் உடலை குளுமையுடன் திகழ செய்ய வேண்டும் என்று கார்பன் அடைக்கப்பட்ட கேஸ் குளிர்பானங்களையும் பழக்கூழ்ச் சாறுகள் என்று இரசாயன பவுடர் கலந்து பழரசங்களை வாங்கி அருந்தி வருகிறோம். இவை அனைத்தும் உடலுக்கு குளிர்ச்சியை தராது.
அத்துடன் உடலில் வேறு விதமான உபாதைகளை ஏற்படுத்தி விடும்.எனவே நாம் கோடைகாலம் முழுவதும் இயற்கையான முறையில் கிடைக்கும் குளிர்பானங்கள், பழச்சாறுகள், சர்பத்களை நம்முன்னே தயார் செய்தும், அவ்வப்போது தயாரித்து வழங்கும் கடைகளில் வாங்கி அருந்த வேண்டும்.
பெரும்பாலும் நமது வீட்டிலேயே தயார் செய்து பழரசம் மற்றும் குளிர்பானங்களை அருந்துவதே சாலச்சிறந்தது.
ஏனெனில் கடைகளில் சேர்க்கப்படும் தண்ணீர், அரைப்பான்கள் போன்றவற்றின் தூய்மை பற்றின கேள்விகள் எழக்கூடும்.
வீட்டில் தயாரிக்கப்படும் கோடைகால குளிர்பானங்கள் தினம் தினம் புதிதாய், புதிய சுவை பலவிதமான பழங்கள் இணைந்தவாறும் தயாரிக்கப்படுவதுடன் இவை உடலுக்கு குளிர்ச்சியை தருவதுடன், உடலில் தங்கும் கழிவுகளை வெளியேற்றவும் உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்களை தரவல்லதாகவும் உள்ளன.
பழங்களுடன் காய்கறிகள், சில பச்சை கீரைகள் போன்றவைகளும் குளிர்பானங்களாக தயாரித்து அருந்தும்போது உடல் புத்துணர்வுடன், கோடைகால நோய் ஏதும் தாக்காமல், சரும வறட்சி, நாவறட்சி ஏற்படாமல் பாதுகாக்க முடிகிறது.