சுட்டெரிக்கும் வெயில்! பொது மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

சுட்டெரிக்கும் வெயில்! பொது மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

மத்திய, சப்ரகமுவ, தெற்கு, ஊவா, மேற்கு மாகாணங்களில் மற்றும் குருநாகல் மாவட்டத்தில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

அதில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

சூரியனின் வடதிசை நோக்கிய தொடர்பான இயக்கத்தின் காரணமாக இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

இதன்படி, இன்று திருக்கேஸ்வரம், பாலைமோட்டை, பரக்கும்பர, மற்றும் கல்லாரவ ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.10 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

இதேவேளை, அதிக வெப்பத்துடன் கூடிய காலநிலை மே மாதம் இறுதி வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வெப்பநிலை 32 பாகை முதல் 41 பாகை செல்சியஸ் வரையிலான எல்லைக்குள் இருக்கும் போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய தேவையுள்ளது. இதன் காரணமாக தசைப்பிடிப்புடன் அலர்ச்சி ஏற்படலாம்.

வடமேல், வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கம்பஹா, அம்பாறை மாவட்டங்களிலும் இத்தகைய நிலை நீடிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக, வெளியிடங்களில் வேலை செய்வோர் அடிக்கடி தண்ணீர் அருந்தி நிழலில் ஓய்வெடுப்பது அவசியம். முதியவர்களையும் நோயாளிகளையும் பரிசோதிப்பது அவசியம்.

பிள்ளைகளை தனியே விடக்கூடாது. இலேசான, வெளிர்நிற ஆடைகளை அணிவது உசிதமானது என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள ஆலோசனைக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Copyright © 0981 Mukadu · All rights reserved · designed by Speed IT net