கொழும்பில் இடம்பெற்றது தற்கொலை குண்டு தாக்குதல்!

கொழும்பில் இடம்பெற்றது தற்கொலை குண்டு தாக்குதல்!

கொழும்பில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை இஸ்லாமிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரிகளே நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து இந்த விடயம் தெரியவந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பில் ஷங்ரி-லா விடுதியில் நேற்று இரண்டு பேர் 616வது இலக்க அறையில் தங்கியுள்ளனர். இந்நிலையில், குறித்த இரண்டு சந்தேக நபர்களுமே இன்று விடுதியின் உணவகப் பகுதி மற்றும் மண்டபத்தில் குண்டுகளை வெடிக்க வைத்துள்ளனர்.

இந்த விடயம் அங்கிருந்த கண்காணிப்பு காணொளிப் பதிவில் இருந்து தெரிய வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஷங்ரி- லா விடுதி குண்டுவெடிப்புக்கு 25 கிலோ எடையுள்ள சி-4 வெடிபொருள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று விசாரணையாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், தற்கொலைக் குண்டுதாரிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் தங்கியிருந்த அறையை உடைத்து காவல்துறையினர் சோதனையிட்டு அங்கிருந்து சில பொருட்களைக் கைப்பற்றியுள்ளனர்.

எனினும், தற்கொலைக் குண்டுதாரிகள் உள்நாட்டவர்களா வெளிநாட்டவர்களா என்பது உறுதி செய்யப்படவில்லை. மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று காலை முதல் நாட்டில் பல பகுதிகளிலும் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் 200க்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அத்துடன், 500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில், தற்போது ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், பாதுகாப்பு கருதி சமுக வலைதளங்களான பேஸ்புக், வட்ஸ்அப் உள்ளிட்டவைகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net